இந்தியா - இலங்கை இடையே 23 கி.மீ கடல் பாலம் அமைக்க மத்திய அரசு திட்டம் என தகவல்


இந்தியா - இலங்கை இடையே 23 கி.மீ கடல் பாலம் அமைக்க மத்திய அரசு திட்டம் என தகவல்
x

மும்பை - நவி மும்பை இடையே அமைக்கப்பட்டுள்ள 21.8 கிலோமீட்டர் நீளம் கொண்ட அடல் சேது பாலம் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி,

சுற்றுலாவையும், பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மற்றொரு முக்கிய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்தியா – இலங்கை இடையே பாலம் அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டின் தனுஷ்கோடி மற்றும் இலங்கையின் தலைமன்னாரை இணைக்கும் வகையில் கடலின் குறுக்கே 23 கிலோமீட்டர் நீளமுள்ள பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து மத்திய அரசு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் 23 கி.மீ நீளமுள்ள புதிய ராமர் சேது பாலம், இந்தியாவின் தனுஷ்கோடியை இலங்கையின் பாக் ஜலசந்தி வழியாக இணைக்கும் சேதுசமுத்திரம் திட்டம், போக்குவரத்துச் செலவை 50 சதவீதம் குறைத்து, இலங்கைத் தீவை இணைக்க உதவும். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பான ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை - நவி மும்பை இடையே அமைக்கப்பட்டுள்ள அடல் சேது பாலத்தை பிரதமர் மோடி சமீபத்தில் திறந்து வைத்தார். நாட்டிலேயே மிக நீண்ட கடல்வழி பாலம் என்ற பெருமையை அடல் சேது பாலம் பெற்றுள்ளது.

கடந்த ஜூலை மாதம் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியா வந்தபோது பாலம் அமைப்பதற்கான ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சகம் (MEA) இது தொடர்பாக மற்ற அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுடன் ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாலம் அமைப்பது தொடர்பாக விரிவாக ஆலோசித்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அயோத்தி கோவில் சிலை பிரதிஷ்டை விழாவிற்கு முன்னதாக பிரதமர் மோடி தனது ஆன்மீக பயணத்தை அரிச்சல்முனை பகுதியில் முடித்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story