வருகிற 2030-ம் ஆண்டுக்குள் அரசு பஸ்கள் மின்சார பஸ்களாக மாற்றப்படும்; போக்குவரத்து மந்திரி ஸ்ரீராமுலு தகவல்


வருகிற 2030-ம் ஆண்டுக்குள் அரசு பஸ்கள் மின்சார பஸ்களாக மாற்றப்படும்; போக்குவரத்து மந்திரி ஸ்ரீராமுலு தகவல்
x

வருகிற 2030-ம் ஆண்டுக்குள் அரசு பஸ்கள் மின்சார பஸ்களாக மாற்றப்படும் என்று போக்குவரத்து மந்திரி ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர் தன்வீர்சேட் கேட்ட கேள்விக்கு போக்குவரத்து மந்திரி ஸ்ரீராமுலு பதிலளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் வருகிற 2030-ம் ஆண்டுக்குள் அனைத்து அரசு பஸ்களும் மின்சார பஸ்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 35 ஆயிரம் அரசு பஸ்கள் உள்ளன.

மின்சார பஸ்களை மாற்ற தேவையான உதவிகளை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை செய்து வருகிறார். மின்சார பஸ்களாக மாற்றுவதால் செலவு குறைவதுடன் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். சோதனை அடிப்படையில் முதல் கட்டமாக பெங்களூருவில் 90 மின்சார பஸ்களின் சேவை ஒப்பந்த அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளன. 12 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த பஸ்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.64 செலவாகிறது. ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் மொத்தம் 300 மின்சார பஸ்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது 90 பஸ்கள் ஓடுகின்றன. மீதமுள்ள பஸ்கள் படிப்படியாக போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும். மேலும் 921 மின்சார பஸ்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு ஸ்ரீராமுலு கூறினார்.


Next Story