டயர் வெடித்ததால் அரசு பஸ் கவிழ்ந்தது; டிரைவர் நசுங்கி சாவு


டயர் வெடித்ததால் அரசு பஸ் கவிழ்ந்தது; டிரைவர் நசுங்கி சாவு
x

டயர் வெடித்ததால் அரசு பஸ் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பலியானார். மேலும் படுகாயமடைந்த 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

பெங்களூரு:

அரசு பஸ் கவிழ்ந்தது

கதக் மாவட்டம் லட்சுமேஸ்வரில் இருந்து நேற்று காலை கர்நாடக அரசு பஸ் தார்வார் மாவட்டம் உப்பள்ளி நோக்கி புறப்பட்டு வந்தது. இந்த பஸ்சில் டிரைவர், கண்டக்டர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

இந்த பஸ் நேற்று காலை தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா ஷெரேவாடா பகுதியில் வந்தது. அந்த சமயத்தில் பஸ்சின் முன்பக்க டயர் திடீரென்று வெடித்தது. வேகமாக வந்ததால் பஸ்சை டிரைவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் தறிகெட்டு ஓடிய பஸ் சாலையோர பள்ளத்தில் பல்டி அடித்து கவிழ்ந்தது.

2 பேர் கவலைக்கிடம்

இந்த விபத்தில் பஸ் டிரைவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். உடனே அப்பகுதி மக்கள் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதில் பலத்த காயமடைந்த 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் குந்தகோல் புறநகர் போலீசார் விரைந்து வந்து பலியான டிரைவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பலியான டிரைவரின் பெயர், விவரம் உடனடியாக தெரியவரவில்லை.

விபத்து தொடர்பாக குந்துகோல் புறநகர் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story