மங்களூரு விமான நிலையத்தில் ரூ.1.¼ கோடி தங்கம் சிக்கியது
அபுதாபி, துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.1.¼கோடி தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மங்களூரு:-
விமான நிலையம்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பஜ்பேயில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து ெவளிநாடுகளுக்கும், ெவளிமாநிலங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் தங்கம், போதைப்பொருள், வெளிநாட்டு பணம் கடத்தும் சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. இதனால் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அபுதாபியில் இருந்து மங்களூருவுக்கு விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம் போல சோதனை செய்தனர்.
தங்கம் கடத்தல்
அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் அந்த நபரை தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த நபரின் வயிற்றில் 4 கேப்சூல்கள் இருந்தன. இதையடுத்து அதிகாரிகள், அந்த நபரின் வயிற்றில் இருந்த கேப்சூல்களை ெவளியே எடுத்து சோதனை செய்தனர். அப்போது அதில் தங்கம் இருந்தது. இதனால் அந்த நபர், தங்கத்தை கேப்சூல் வடிவில் விழுங்கி கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்து 4 கேப்சூல்களில் இருந்த ரூ.70 லட்சத்து 62 ஆயிரத்து 510 மதிப்பிலான 1 கிலோ 183 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துகொண்டனர். விசாரணையில் அவர், கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த முகமது நவ்பால் (வயது 23) என்பது தெரியவந்தது.
ரூ.1.16 கோடி தங்கம் பறிமுதல்
இதேபோல் துபாயில் இருந்து மங்களூருவுக்கு வந்த மற்றொரு விமானத்தில் வந்திறங்கிய பயணிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி தனது உடைமைக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.45 லட்சத்து 78 ஆயிரத்து 990 மதிப்பிலான 767 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அவர், கேரள மாநிலம் காசர்கோட்ைட சேர்ந்த அகமது கபீர் (26) என்பது தெரியவந்தது. இந்த 2 சம்பவங்களிலும் சேர்த்து மொத்தம் ரூ.1 கோடியே 16 லட்சத்து 41 ஆயிரத்து 500 மதிப்பிலான 2 கிலோ 50 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
2 பேர் கைது
இதையடுத்து பிடிபட்ட 2 பேரையும் அதிகாரிகள் பஜ்பே போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.