கன்டெய்னர் லாரியில் கொண்டு சென்ற ரூ.2¾ கோடி தங்கம் பறிமுதல்
சிக்கமகளூருவில் உரிய ஆவணங்கள் இன்றி கன்டெய்னர் லாரியில் கொண்டு சென்ற ரூ.2¾ கோடி தங்கத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிக்கமகளூரு:-
கர்நாடக தேர்தல்
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள், தங்கம் உள்ளிட்டவை வழங்குவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் ஏராளமான சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றாலும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
ரூ.2.74 கோடி தங்கம்
இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா எம்.சி.ஹள்ளி பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சிவமொக்காவில் இருந்து பெங்களூரு நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
அந்த லாரியை தடுத்து நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது கன்டெய்னர் லாரியில் அதிகளவு தங்கம் இருந்தது. இதுகுறித்து லாரியில் இருந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் அந்த தங்கத்திற்கான எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லை.
இதையடுத்து கன்டெய்னர் லாரியில் இருந்த ரூ.2.74 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துகொண்டனர். மேலும் கன்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணை
அந்த தங்கத்தை சிக்கமகளூருவில் உள்ள அரசு கருவூலத்துக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியில் இருந்தவர்களை பிடித்து விசாரித்து வருகிறார்கள். அந்த நகைகள் வாக்காளர்களுக்கு வழங்க கடத்தி வரப்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.