காஷ்மீரில் இந்திய ஒற்றுமை யாத்திரை: நான் எனது வீட்டிற்கு திரும்புவதை போல் உணர்கிறேன் - ராகுல் காந்தி
தனது வீட்டிற்கு திரும்புவதை போல் உணர்வதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
லக்கன்பூர், (ஜம்மு-காஷ்மீர்)
இந்திய ஒற்றுமை யாத்திரையின் கடைசிக் கட்டமாக ஜம்மு-காஷ்மீருக்குள் நுழைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மக்களின் கவனத்தைத் திசை திருப்பி, கொள்ளையடிப்பதன் மூலம் மத்திய அரசு பெருமளவில் கொள்ளையில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கினார். பல மாநிலங்களை கடந்து பஞ்சாப்பில் நடந்து வந்த இந்த யாத்திரை, நேற்று முன் தினம் அங்கிருந்து புறப்பட்டு தற்போது ஜம்மு-காஷ்மீருக்குள் நுழைந்துள்ளது.
காலையில் காடோடா கிராமம் அருகே இமாசல பிரதேசத்துக்குள் நுழைந்தது. கடும் பனியை பொருட்படுத்தாமல் ஏராளமானோர் நடந்தனர். வாழ்த்து கோஷங்கள் முழங்கின. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. குறிப்பிட்ட சிலர் மட்டும் பாதுகாப்பு வளையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், ராகுல்காந்தி சாலையோரத்தில் நின்றிருந்த இளைஞர்களுடன் உரையாடினார். மான்சர் சுங்கச்சாவடி அருகே ராகுல்காந்திக்கும், தொண்டர்களுக்கும் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இமாசலபிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர்சிங் சுக்கு, துணை முதல்-மந்திரி முகேஷ் அக்னிஹோத்ரி, மாநில காங்கிரஸ் தலைவர் பிரதிபாசிங் மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் திரண்டு நின்று வரவேற்றனர்.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமரிந்தர்சிங் ராஜா வார்ரிங், தேசிய கொடியை இமாசலபிரதேச காங்கிரஸ் தலைவர் பிரதிபாசிங்கிடம் ஒப்படைத்தார்.
இதனையடித்து கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் மக்களிடையே வெறுப்பை பரப்பிவிட்டன. வன்முறை, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை நாடு எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகளாக உள்ளது. ஆனால் ஊடகங்கள் அவற்றை முன்னிலைப்படுத்தவில்லை. பாலிவுட் நட்சத்திரங்களை கொண்டு மக்களின் கவனத்தை திசை திருப்புகிறது.
எனது முன்னோர்கள் இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள். நான் எனது வீட்டிற்கு திரும்புவதை போல் உணர்கிறேன். ஜம்மு காஷ்மீர் மக்களின் துன்பங்களை அறிந்து, குனிந்த தலையுடன் உங்களிடம் வருகிறேன்" என்று அவர் கூறினார்.