கொல்கத்தாவில் லட்சுமி பூஜையில் இரு பிரிவினரிடையே வன்முறை: 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு!
மிலாது நபிக்காக வைக்கப்பட்டிருந்த மதக் கொடிகள் கிழிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு வன்முறை ஏற்பட்டது.
கொல்கத்தா,
மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவின் புறநகர் பகுதியான மொமின்பூரில் லட்சுமி பூஜை நேற்று நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், மிலாது நபிக்காக வைக்கப்பட்டிருந்த மதக் கொடிகள் கிழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வன்முறை ஏற்பட்டது.லட்சுமி பூஜையில் பங்கேற்றவர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, கடைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதில் ஏராளாமன மக்கள் காயமடைந்தனர்.
கொல்கத்தாவின் புறநகர் பகுதியான மொமின்பூரில் பூஜையில் பங்கேற்றவர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, கடைகள் தீ வைக்கப்பட்டதாக வீடியோ வெளியிட்டுள்ள அம்மாநில பாஜக சுகந்த மஜும்தர், காவல்துறை தடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வன்முறையில் துணை போலீஸ் கமிஷனர் உட்பட பல போலீசார் காயமடைந்துள்ளனர் துணை போலீஸ் கமிஷனர் சவுமியா ராய் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் அவர் படுகயமடைந்தார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் ஏராளமான மக்கள் எக்பால்பூர் காவல் நிலையத்தை சுற்றி வளைத்தனர். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொல்கத்தா எக்பால்பூர் பகுதியில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்றுகூடவோ அல்லது பெரிய கூட்டங்கள் நடத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இன்று முதல் அக்டோபர் 12 வரை மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. அமைதியை சீர்குலைக்கும் மற்றும் பொது அமைதியை சீர்குலைக்கும் எவரும் கைது செய்யப்படுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, அப்பகுதியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் உள்பட 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.