பிரபல தாதா முக்தார் அன்சாரியின் நெருங்கிய உதவியாளர் கோர்ட்டு வளாகத்தில் வைத்து சுட்டுக்கொலை
பிரபல தாதா முக்தார் அன்சாரியின் நெருங்கிய உதவியாளர் சஞ்சீவ் லக்னோ கோர்ட்டு வளாகத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
லக்னோ
பிரபல தாதா முக்தார் அன்சாரியின் நெருங்கிய உதவியாளர் சஞ்சீவ் மகேஸ்வரி ஜீவா லக்னோ நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் மீது வழக்கறிஞர்கள் போல் வேடம் அணிந்து வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
துப்பாக்கி சூடு நடத்தியவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
முக்தார் அன்சாரியின் நெருங்கிய உதவியாளராகக் கருதப்படும் ஜீவா, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பிரம்மதத்தா திவேதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். ஜீவா மீது பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நில அபகரிப்பு, மிரட்டல் மற்றும் கொலை உள்பட 60-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல தாதா முக்தர் அன்சாரி, கடந்த 2005-ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஏறக்குறைய 2 தசாப்தங்களாக சிறையில் இருந்து வருகிறார்.
காங்கிரஸ் மூத்த தலைவரான அவதேஷ் ராய் கடந்த 1991-ம் ஆண்டு ஆகஸ்டு 3-ந்தேதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு கடந்த ஆண்டு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. வாரணாசியில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.வுக்கான கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. கடந்த மே 19-ந்தேதி விசாரணை முடிந்தது.இந்த வழக்கில் முக்தார் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.