சோனியா காந்தி குடும்பம் 'காலாவதியான மருந்து' - அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா விமர்சனம்!


சோனியா காந்தி குடும்பம் காலாவதியான மருந்து - அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா விமர்சனம்!
x

அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

புதுடெல்லி,

அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா 20 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசில் இருந்தவர். அதன்பின் அவர் பாஜகவில் இணைந்து அசாம் முதல்-மந்திரியாக உள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து அவர் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:-

சோனியா காந்தி குடும்பம் 'காலாவதியான மருந்துகள்' போன்றவை, காந்தி குடும்பத்தை எதிர்க்கட்சி என்ற பெயரில் பார்க்க வேண்டாம். அவர்களால் எதிர்க்கட்சிப் பாத்திரத்தைக்கூட செய்ய முடியாது.

நாட்டை ஆளும் கட்சியாக காங்கிரஸ் இன்னும் உணர்கிறது, மேலும் பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸிடம் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்றியது என்றும் காங்கிரஸ் இன்னும் உணர்கிறது.

காங்கிரஸ் கட்சியானது, நாட்டை ஆட்சி செய்வதற்கான இயல்பான கட்சி என்ற கருத்து சில அதிகாரவர்க்க பிரிவினரிடையே உள்ளது.இது தகர்த்தெறியப்பட வேண்டும். அப்போதுதான் சரியான ஜனநாயகம் கிடைக்கும்

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, எதிர்க்கட்சி அரசாங்கங்களை டிஸ்மிஸ் செய்ய சட்டப்பிரிவு 356ஐ தவறாக பயன்படுத்தியது. தற்போது இந்தியாவில் ஜனநாயகத்தின் இயல்பான அம்சங்கள் எதிர்க்கட்சிகளுக்குக் கிடைக்கின்றன.

நாட்டில் ஒரு குடும்பத்தின் ஆட்சியை உருவாக்கியது காங்கிரஸ். ஆனால், 'ஒரு கட்சி முறைக்கு', நரேந்திர மோடி சவாலாக இருக்கிறார். அவர் காங்கிரஸின் மேலாதிக்கத்திற்கு சவால் விடுகிறார்.

2024 மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி அதிக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும்.

இவ்வாறு அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.


Next Story