பணம் வைத்து சூதாடிய ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் பணி இடைநீக்கம்


பணம் வைத்து சூதாடிய ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் பணி இடைநீக்கம்
x

உப்பள்ளியில் பணம் வைத்து சூதாடிய ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாரை பணி இடைநீக்கம் செய்து தார்வார் போலீஸ் கமிஷனர் லாபுராம் உத்தரவிட்டுள்ளார்.

உப்பள்ளி;

பணம் வைத்து சூதாட்டம்

தார்வார் மாவட்டம் உப்பள்ளி அக்‌ஷயா காலனியில் உள்ள தனியார் குடியிருப்பின் 2-வது மாடியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கோகுல்ரோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற கோகுல்ரோடு இன்ஸ்பெக்டர் காளிமிர்ச்சி தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 4 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தார்வார் மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சந்தோஷ் சோலப்பகோல், தலைமை போலீஸ்காரர் முத்தப்பா காடநாயக், நவீன் தொப்பலகட்டி, உப்பள்ளி கிழக்கு போக்குவரத்து போலீஸ் நிலைய போலீஸ்காரர் பசவனப்பா பாவிகாலா ஆகியோர் என்பது தெரியவந்தது.

4 பேர் பணி இடைநீக்கம்

சூதாட்டத்தில் ஈடுபட்ட போலீசார் குறித்து தார்வார் போலீஸ் கமிஷனர் லாபுராமிற்கு தெரியவந்தது. உடனே அவர் கோகுல்ரோடு இன்ஸ்பெக்டர் காளி மிர்ச்சி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் காளிமிர்ச்சி விசாரணை நடத்தி தார்வார் நகர போலீஸ் கமிஷனர் லாபுராமிடம் அறிக்கையை சமர்பித்தார். இந்த நிலையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சந்தோஷ் உள்பட 4 போலீசாரையும் பணியிடை நீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் லாபுராம் உத்தரவிட்டுள்ளார்.


Next Story