தணிக்கை குழு கூறிய ஊழல் புகார்கள்; நிதின் கட்காரி அதிருப்தி தவறு செய்தவர்கள் மீது பொறுப்பு நிர்ணயிக்க உத்தரவு


தணிக்கை குழு கூறிய ஊழல் புகார்கள்; நிதின் கட்காரி அதிருப்தி தவறு செய்தவர்கள் மீது பொறுப்பு நிர்ணயிக்க உத்தரவு
x
தினத்தந்தி 19 Aug 2023 4:45 AM IST (Updated: 19 Aug 2023 4:45 AM IST)
t-max-icont-min-icon

ஊழல் தொடர்பாக தணிக்கை குழு எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காத அதிகாரிகள் மீது நிதின் கட்காரி அதிருப்தி அடைந்துள்ளார்.

புதுடெல்லி,

ஊழல் தொடர்பாக தணிக்கை குழு எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காத அதிகாரிகள் மீது நிதின் கட்காரி அதிருப்தி அடைந்துள்ளார். மெத்தனமாக செயல்பட்ட உயர் அதிகாரிகள் மீது பொறுப்பு நிர்ணயிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகத்தால், கடந்த 2016-ம் ஆண்டு 'பாரத் மாலா' திட்டம் தொடங்கப்பட்டது. இதில், துவாரகா எக்ஸ்பிரஸ் சாலையும் அடங்கும்.

துவாரகா எக்ஸ்பிரஸ் சாலை போடுவதற்கு ஒரு கி.மீ. தூரத்துக்கு ரூ.18 கோடியே 20 லட்சம் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு இருந்தது. இத்தொகை கி.மீ.க்கு ரூ.251 கோடியாக உயர்ந்திருப்பதாகவும், இதில் ஊழல் நடந்திருப்பதாகவும் மத்திய தலைமை கணக்கு தணிக்கை குழு சமீபத்தில் கூறியிருந்தது.

அந்த அறிக்கை, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள், மத்திய அரசு மீது குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிைலயில், துவாரகா எக்ஸ்பிரஸ் சாலையின் கட்டுமான செலவு குறித்து தணிக்கை குழு கேள்விகள் எழுப்பியதாகவும், ஆனால், மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

எந்த பதிலும் வராததால், தணிக்கை குழு, தவறான முறைப்படி, கட்டுமான செலவுகளை கணக்கீடு செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, மத்திய தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி, உயர்மட்ட ஆய்வு கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில், தணிக்கை குழுவின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய உயர் அதிகாரிகள், உரிய பதில் அளிக்காததற்கு அதிருப்தி தெரிவித்தார்.

இந்த மெத்தனத்துக்கு காரணமான உயர் அதிகாரிகள் மீது பொறுப்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:-

ஒரு கி.மீ. சாலை கட்டுமான செலவான ரூ.18 கோடியே 20 லட்சத்தில், மேம்பாலங்கள், சுற்று சாலைகள் ஆகியவற்றுக்கான செலவு சேராது என்று தணிக்கை குழுவே கூறியுள்ளது.

இச்சாலையில், மேம்பாலங்கள், கடவுப்பாதைகள், சுரங்க பாதைகள் ஆகியவை இடம்பெற்று இருப்பதால் செலவு அதிகரித்துள்ளது. குறிப்பாக, அரியானாவில் மேம்பாலங்கள் கட்டியதால் செலவு அதிகரித்தது.

மேலும், துவாரகா எக்ஸ்பிரஸ் சாலைக்கு சராசரி கட்டுமான செலவாக ஒரு கி.மீட்டருக்கு ரூ.206 கோடி என நிர்ணயித்து, டெண்டர் கோரப்பட்டது. இறுதியாக, கி.மீட்டருக்கு ரூ.181 கோடியே 94 லட்சத்துக்குத்தான் டெண்டர் விடப்பட்டது.

இந்தவகையில், மதிப்பீட்டை விட 12 சதவீத தொகை சேமிக்கப்பட்டுள்ளது. இதை தணிக்கை குழு கவனிக்கவில்லை.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story