கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிப்பு - காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை


கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிப்பு - காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
x

கே.ஆர்.எஸ். அணைக்கு நேற்று முன்தினம் மீண்டும் நீர்வரத்து அதிகரித்ததால், அந்த அணை 2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரியின் குறுக்கே கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜ சாகர்) அமைந்துள்ளது. மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் கபினி அணை அமைந்துள்ளது. இந்த அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளான குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டி நிரம்பின.

இதனால் இந்த அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மழை பெய்யாததால் நீர்வரத்து குறைந்த நிலையில், தண்ணீர் திறப்பும் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் கே.ஆர்.எஸ். அணைக்கு நேற்று முன்தினம் மீண்டும் நீர்வரத்து அதிகரித்ததால், அந்த அணை 2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது.

தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று முழுகொள்ளளவுடன் (124.80 அடி) உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரத்து 98 கனஅடியாக உள்ளது. நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 41 ஆயிரத்து 99 கன அடியாக இருந்தது. கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவில் இருப்பதால் அணையில் இருந்து வினாடிக்கு 70 ஆயிரத்து 44 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதில் காவிரி ஆற்றில் வினாடிக்கு 68 ஆயிரத்து 825 கனஅடி நீரும், கால்வாயில் வினாடிக்கு 1,219 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 41 ஆயிரத்து 99 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 2,282.22 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரத்து 965 கனஅடியாக (நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரத்து 912 கனஅடி) உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நேற்று முன்தினம் தண்ணீர் வெளியேற்றம் வினாடிக்கு 13 ஆயிரத்து 542 கனடியாக இருந்தது.

இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 90 ஆயிரத்து 44 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 53 ஆயிரத்து 99 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்று தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கே.ஆர்.எஸ். அணை முழுமையாக நிரம்பியதால் அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் காவிரி கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், நதி அருகே யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கால்நடைகளையும் ஆற்றின் அருகே கொண்டு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story