இலவச திட்டங்கள் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டின் வாய்மொழி கருத்துகளால் நன்மதிப்புக்கு சேதாரம் - தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல்
சுப்ரீம் கோர்ட்டின் வாய்மொழி கருத்துகளால் நன்மதிப்புக்கு சேதாரம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி,
இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யக்கோரி அஸ்வினி குமார் உபாத்யா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த விசாரணையின்போது. இலவச திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த 'நீதி ஆயோக்', மத்திய நிதி ஆணையம், சட்ட ஆணையம், ரிசர்வ் வங்கி, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய நிபுணர் குழுவை ஏற்படுத்துவது குறித்த யோசனைகளை தெரிவிக்க மனுதாரர், மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கும், மூத்த வக்கீல் கபில் சிபலுக்கும் உத்தரவிட்டது. மேலும் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கைவிரித்து விட்டதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
மத்திய அரசின் அமைப்புகள் அங்கம் வகிக்கும்போது, அரசியலமைப்பு சாசன அதிகாரம் பெற்ற அமைப்பான இந்திய தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டு உத்தேசித்துள்ள நிபுணர் குழுவில் அங்கம் வகிப்பது பொருத்தமாக இருக்காது.
நாட்டில் தொடர்ந்து தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சூழலில் சுப்ரீம் கோர்ட்டு அமைக்கும் இந்த நிபுணர் குழுவில் பங்கேற்று தேர்தல் ஆணையம் அதன் கருத்துகளை தெரிவித்தால், அவை பொதுவெளியில் வெளியிடும் பட்சத்தில், இந்த விவகாரத்தை முன்கூட்டி தீர்மானிப்பது போலாகி விடும், சமவாய்ப்பை குலைப்பதாகி விடும்.
இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த வாய்மொழி கருத்துகள் பல ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்ட ஆணையத்தின் நற்பெயருக்கு சரி செய்ய முடியாத சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளன.
பேரிடர், பெருந்தொற்று காலங்களில் வழங்கப்படும் உயிர்காக்கும் மருந்துகள், உணவு, நிதி உதவி போன்றவை வாழ்வு, பொருளாதாரத்தை காக்க கூடும். ஆனால் சாதாரண நாட்களில் இவை வழங்கினால், இலவச பொருட்கள் என்றும் அழைப்பார்கள்.
இந்த விவகாரத்தில் அனைத்து அம்சங்களையும் விரிவான ஆழமான விவாதத்திற்கு உட்படுத்த வேண்டியுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.