நிலத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதாக கூறி விவசாயியிடம் ரூ.2¼ லட்சம் மோசடி


நிலத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதாக கூறி விவசாயியிடம் ரூ.2¼ லட்சம் மோசடி
x

நிலத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதாக கூறி விவசாயியிடம் ரூ.2¼ லட்சம் மோசடி செய்த சம்பவம் சாம்ராஜ்நகரில் நடந்துள்ளது.

கொள்ளேகால்:-

செல்போன் கோபுரம்

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா சரகூரு கிராமத்தை சேர்ந்தவர் சித்தராஜு. இவரது மகன் அசோக் (வயது 30). விவசாயி. கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதனை எடுத்து அசோக் பேசினார். அப்போது எதிர்முனையில் பெண் ஒருவர் பேசினார். அவர், தான் பிரபல செல்போன் சிம் கார்டு நிறுவனத்தின் அதிகாரி பேசுவதாகவும், தங்கள் நிறுவனத்தின் செல்போன் கோபுரம் அமைக்க நிலம் தேவைப்படுவதாகவும் கூறினார்.

மேலும், உங்களது நிலத்தை செல்போன் கோபுரம் அமைக்க கொடுத்தால், நிலத்துக்கு ரூ.60 லட்சம் முன்பணமும், மாதம் ரூ.50 ஆயிரம் வாடகையும் தருவதாக தெரிவித்தார். மேலும் நீங்கள் கூறும் நபருக்கு மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளத்துடன் வேலை கொடுப்பதாகவும் அந்த பெண் கூறி உள்ளார். இதனை நம்பிய அசோக், தனது நிலத்தில் செல்போன் கோபுரம் அமைக்க சம்மதம் தெரிவித்தார்.

ரூ.2.29 லட்சம் மோசடி

இதையடுத்து அந்த பெண், செல்போன் கோபுரம் அமைக்க பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் அசோக் அந்த பெண்ணின் வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளாக ரூ.2.29 லட்சம் வரை செலுத்தி உள்ளார். ஆனால் செல்போன் கோபுரம் அமைப்பது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் முன்பணமும் கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அசோக், அந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு தொடர்புகொண்டார்.

அப்போது அந்த செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. அப்போது தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அசோக், இதுகுறித்து கொள்ளேகால் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story