ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு...உத்தரபிரதேசத்தில் சோகம்
உத்தரபிரதேச மாநிலம் காக்ரா ஆற்றில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் தெலியார் கிராமத்திற்கு அருகே காக்ரா ஆறு உள்ளது. இந்த ஆற்றில் குளிப்பதற்காக அருகில் உள்ள தெலியார் கிராமத்தை சேர்ந்த 5 பேர் வந்துள்ளனர்.
இவர்கள் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது ஒருவர் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். நீச்சல் தெரியாமல் தத்தளித்துக்கொண்டிருந்த அவரை காப்பாற்றுவதற்காக அடுத்தடுத்து 4 பேர் சென்ற நிலையில், அவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பிரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி நிகாசன் பிரதீப் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பலியானவர்கள் தெலியார் கிராமத்தை சேர்ந்த சுசீலா (52), சத்யம் (24), ஊர்வசி (17) மற்றும் கன்ஹா (10) என அடையாளம் தெரியவந்துள்ளது. இதில் உயிரிழந்த அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். மேலும் நைனி என்பவர் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்" என்றார்.