தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு: காவிரி ஆற்றில் தனது ரத்தத்தை கொட்ட முயன்ற முன்னாள் எம்.எல்.ஏ.


தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு: காவிரி ஆற்றில் தனது ரத்தத்தை கொட்ட முயன்ற முன்னாள் எம்.எல்.ஏ.
x

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி ஆற்றில் முன்னாள் எம்.எல்.ஏ. அன்னதாணி தனது ரத்தத்தை கொட்ட முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

மண்டியா:

கர்நாடகம்-தமிழகம் இடையே தென்மேற்கு பருவமழை பொய்த்து போகும்போது காவிரி நீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக பிரச்சினைகள் நீடித்து வருகிறது. அதன்படி தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்று மாநில அரசு தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிட்டு வருகிறது. இதற்கிடையில் மேலும் 18 நாட்களுக்கு தமிழகத்திற்கு வழங்கவேண்டும் என்றும் காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை கண்டித்து கர்நாடகா முழுவதும் விவசாயிகள், கன்னட அமைப்பினர், பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்) அணை அமைந்துள்ள மண்டியா மாவட்டத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பூங்காவில் பல்வேறு விவசாய அமைப்பை சேர்ந்தவர்கள் 30-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மாநில அரசுக்கு எதிராகவும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு எதிராகவும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

இதேபோல மண்டியா நகரில் உள்ள சர் எம்.விசுவேஸ்வரய்யா சர்க்கிளில் கன்னட அமைப்பினர் கண்டன ஊர்வலம் நடத்தினர். மேலும் மலவள்ளி தாலுகாவில் முன்னாள் எம்.எல்.ஏ.அன்னதாணி தலைமையில் கூடிய ஜனதா தளம் (எஸ்), பா.ஜனதா கட்சியினர் மற்றும் கன்னட அமைப்பினர், விவசாயிகள் ஆகியோர் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. அன்னதாணி உள்பட கன்னட அமைப்பினர் ஊசி மூலம் கையில் இருந்த ரத்தத்தை எடுத்து பாட்டிலில் அடைத்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் அந்த ரத்தத்துடன் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்று சந்தேகாலாவில் உள்ள காவிரி ஆற்றில் ஊற்ற முயற்சித்தனர். இதை அறிந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கையில் இருந்த ரத்த பாட்டிலை கைப்பற்றினர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை அங்கிருந்து திருப்பி அனுப்பினர். இதையடுத்து மீண்டும் மலவள்ளி வந்த அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டக்காரர்கள் கூறியதாவது:-

கர்நாடக அணைகளில் நீர் இருப்பு குறைந்து வருகிறது. மேலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகியிருக்கிறது. இந்தநிைலயில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவது மிகவும் தவறு. சுப்ரீம் கோர்ட்டு, காவிரி மேலாண்மை ஆணையத்திடம் சரியாக முறையிட முடியாத முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் பதவியில் இருந்து விலகவேண்டும்.

அதுவரை எங்கள் போராட்டம் தொடரும், தற்போது ரத்தத்தை காவிரி ஆற்றில் ஊற்றி போராட்டம் நடத்த முயன்றோம். ஆனால் போலீசார் எங்களை தடுத்துவிட்டனர். இருப்பினும் எங்களது போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வோம் என்று கூறினர்.


Next Story