முன்னாள் சட்டத்துறை மந்திரி சாந்தி பூஷன் காலமானார்
முன்னாள் சட்டத்துறை மந்திரி சாந்தி பூஷன் தனது 97 வயதில் இன்று காலமானார்.
புதுடெல்லி,
1977-1979-ம் ஆண்டு காலகட்டத்தில் மத்தியில் மொரார்ஜி தேசாய் அரசில் சட்ட மந்திரியாக பதவி வகித்தவர் சாந்தி பூஷன். மூத்த வக்கீலான இவர், புகழ்பெற்ற சட்ட நிபுணரும் கூட. 97 வயதான சாந்தி பூஷன், சமீபகாலம் வரை சட்டத்தொழிலில் பரபரப்பாக செயல்பட்டார். பொது முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளில் ஆஜராகியிருக்கிறார்.
ரபேல் போர்விமான விற்பனை ஒப்பந்தம் தொடர்பாக கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பொதுநல மனுவில் சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்து அலகாபாத் ஐகோர்ட்டில் தொடரப்பட்ட புகழ்பெற்ற வழக்கில் சாந்தி பூஷன் ஆஜரானார். அதில் இந்திரா காந்தியின் வெற்றி ரத்து செய்யப்பட்டது.
ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த சாந்தி பூஷன், சிறிது காலம் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து செயல்பட்டார்.
உடல்நலம் குன்றியிருந்த சாந்தி பூஷன், டெல்லியில் உள்ள அவரது வீட்டில் நேற்று மரணம் அடைந்தார். சாந்தி பூஷனின் மகன்கள் ஜெயந்த் பூஷன், பிரசாந்த் பூஷனும்கூட முன்னணி வக்கீல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சாந்தி பூஷனின் மறைவுக்கு தலைவர்கள் பலர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சாந்தி பூஷனின் மறைவுக்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "சட்டத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பேசுவதில் உள்ள ஆர்வத்திற்காகவும் ஸ்ரீ சாந்தி பூஷன் ஜி நினைவுகூரப்படுவார். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு இரங்கல். ஓம் சாந்தி" என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.