கர்நாடகா முன்னாள் முதல்-அமைச்சர் சித்தராமையா கைது..!
கர்நாடகா முன்னாள் முதல்-அமைச்சர் சித்த ராமையா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தின் சென்னகிரி தொகுதி பாஜக எம்எல்ஏ மாடால் விருபாக்ஷப்பாவின் மகன் வீட்டில் கணக்கில் வராத ரூ. 8.12 கோடி ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியத்தில் தலைமை கணக்கு அதிகாரியாக பணியாற்றி வரும் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மாடால்.
விருபாக்ஷப்பா கா்நாடக அரசுக்கு சொந்தமான கா்நாடக சோப் அண்ட் டிடா்ஜென்ட் நிறுவனத்தின் (மைசூரு சோப்) தலைவராகவும் உள்ளாா். இந்நிறுவனத்துக்கு மூலப் பொருள்களை கொள்முதல் செய்வது தொடா்பாக ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டிருந்தது.
இதற்காக அவரின் மகன் பிரஷாந்த் லஞ்சம் வாங்கியபோது அதிகாரிகள் கைது செய்தனர். இதைத் தொடா்ந்து, பாஜக எம்எல்ஏ மாடால் விருபாக்ஷப்பா, அவரது மகனும் கா்நாடக ஆட்சிப்பணி அதிகாரியுமான பிரசாந்த் மாடால் உள்ளிட்டோா் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு தொடா்ந்த லோக் ஆயுக்தா போலீசார், பிரசாந்த் மாடால் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனா்.
இந்நிலையில், எம்.எல்.ஏ. விருபாக்ஷப்பாவையும் கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து தடுப்புக் காவலில் அழைத்துச் சென்றனர். அப்போது சித்தராமையாவுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஏராளமான காங்கிரஸ் தலைவர்களும் காவல் துறையால் கைது செய்யப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டனர்.