காட்டுயானை பிடிபட்ட நிலையிலும் வனத்துறை அதிகாரிகள் மீது பொதுமக்கள் தாக்குதல்
கடப்பா அருகே 2 பேரை கொன்ற காட்டுயானையை வனத்துறையினர் பிடித்துவிட்ட நிலையிலும், பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.
மங்களூரு:
கடப்பா அருகே 2 பேரை கொன்ற காட்டுயானையை வனத்துறையினர் பிடித்துவிட்ட நிலையிலும், பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.
காட்டுயானை பிடிபட்டது
தட்சிண கன்னடா மாவட்டம் கடப்பா தாலுகா மீனாடி கிராமத்தில் வசித்து வந்த ரஞ்சிதா(வயது 21) என்ற பெண்ணை கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டுயானை தாக்கி கொன்றது. அவரை காப்பாற்ற முயன்ற அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரையு காட்டுயானை தாக்கி கொன்றது. இதையடுத்து கடந்த 4 நாட்களாக அந்த காட்டுயானையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் அதற்காக மைசூருவில் உள்ள யானைகள் முகாமில் இருந்து கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று மாலையில் வனத்துறையினர் கும்கி யானைகளின் உதவியுடன், கால்நடை டாக்டர் மூலம் துப்பாக்கி வாயிலாக மயக்க ஊசி செலுத்தி அந்த காட்டுயானையை பிடித்தனர்.
இந்த நிலையில் சுங்கதகட்டே பகுதியில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் தங்களது வாகனங்களில் வந்தனர். அந்த வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.
வனத்துரை அதிகாரிகள் மீது தாக்குதல்
மேலும் வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அட்டகாசம் செய்து வந்த காட்டுயானையை பிடிப்பதற்கு காலதாமதம் ஏற்பட்ட காரணத்தால், வனத்துறையினர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது.
ஒரு காட்டுயானை தற்போது பிடித்து விட்டாலும், இன்னொரு காட்டுயானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்ட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறையினர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.