பன்னுன் கொலை சதி: செக் குடியரசில் கைதான இந்தியர் நிகில் குப்தா குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு


பன்னுன் கொலை சதி: செக் குடியரசில் கைதான இந்தியர் நிகில் குப்தா  குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு
x

நிகில் குப்தா குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி 4 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

புதுடெல்லி,

அமெரிக்கா மற்றும் கனடாவின் குடியுரிமை பெற்றுள்ள காலிஸ்தான் தீவிரவாதியும், 'நீதிக்கான சீக்கியர் அமைப்பின்' தலைவருமான குர்பத்வந்த் சிங் பன்னுனை நியூயார்க்கில் வைத்து கொலை செய்ய இந்திய அதிகாரியுடன் இணைந்து முயன்றதாகவும், அதற்காக ஒரு ஆளை வாடகைக்கு அமர்த்தியதாகவும் நிகில் குப்தா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆனால், நிகிலால் அமர்த்தப்பட்ட நபர், அமெரிக்க மத்திய அமைப்பின் முகவராக மாறினார். இதனைத் தொடர்ந்து செக் குடியரசின் பராக் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிகில் குப்தா அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறார். கொலை செய்வதற்காக ஒருவரை ஏற்பாடு செய்த சதி நிரூபிக்கப்பட்டால் நிகில் குப்தாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த நிலையில், செக் குடியரசு சிறையில் இருந்து தன்னை விடுவிக்கவும் அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கையிலும் இந்திய அரசு தலையிட வேண்டும் என்று தனது குடும்பத்தினர் மூலமாக நிகில் குப்தா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அதில், சிறைச்சாலையில் 11 நாட்கள் பட்டினி கிடக்கும் நிலைக்கு நிகில் குப்தாவை அதிகாரிகள் தள்ளியதாகவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து மனுவில் கூறுகையில், நிகில் குப்தா சைவ உணவுகளை சாப்பிடும் பழக்கம் கொண்டவர் எனத் தெரிந்தும் அவருக்கு பீஃப் மற்றும் பன்றி இறைச்சி வகை உணவுகளையே அதிகாரிகள் கொடுத்தனர். 10-11 நாட்களுக்கு அவருக்கு சைவ உனவுகள் மறுக்கப்பட்டது. இது அடிப்படை உரிமை மறுக்கப்படும் விஷயம்" எனக் கூறப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நாங்கள் உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை. விதிமீறல்கள் இருந்தால் மனுதாரர்கள் செக் குடியரசு நீதிமன்றத்தை நாட வேண்டும்"என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி 4 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.


Next Story