விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரர் சாவு
விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியானார்.
உப்பள்ளி-
தார்வார் (மாவட்டம்) தாலுகா கரக போலீஸ் நிலையத்தில் உச்சேஷ் ஹரேகவுடா (வயது37) பணியாற்றி வந்தார். இ்ந்தநிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி பாதுகாப்பு பணிக்காக உச்சேஷ், சப்பி கிராமத்திற்கு சென்றார். அங்கு அவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். பி்ன்னர் மறுநாள் பாதுகாப்பு பணி முடிந்து உச்சேஷ் மோட்டார் சைக்கிளில் கரக போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அவருடன் லட்சுமி என்ற பெண் போலீசும் வந்தார்.
இந்தநிலையில் போலீஸ் அதிகாரி ஒருவர் உச்சேசை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அதில், இடிகட்டி கிராமத்திற்கு பாதுகாப்பு பணிக்கு நீங்கள் போக வேண்டும் என கூறினார். இதையடுத்து உச்சேஷ், லட்சுமி மோட்டார் சைக்கிளில் சென்றனர். இடிகட்டி கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே உச்சேஷ் பரிதாபமாக இறந்தார். லட்சுமிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தார்வார் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.