பள்ளி, மருத்துவமனைகளுக்கு... தேசிய பட்ஜெட்டில் 4%, டெல்லி பட்ஜெட்டில் 40% - கெஜ்ரிவால் பேச்சு
மணீஷ் சிசோடியாவின் தவறு என்னவென்றால், அவர் நல்ல பள்ளி கூடங்களை கட்டினார் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் கிராரி பகுதியில் புதிய பள்ளி கட்டிடங்களுக்கான அடிக்கல்லை முதல்-மந்திரி கெஜ்ரிவால் நாட்டி விட்டு கூட்டத்தினரிடையே பேசினார். அவர் பேசும்போது, அரசால் நடத்தப்படும் பள்ளிகளில் நல்ல கல்வியை தங்களுடைய குழந்தைகள் பெறுவார்கள் என்ற புதிய நம்பிக்கையின் ஒளி ஏழைகளிடம் ஏற்பட்டு இருக்கிறது. இது எங்களுக்கு கிடைத்த ஒரு பெரிய விசயம் ஆகும்.
தேசிய பட்ஜெட்டில், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு 4% செலவிடுகிறது. ஆனால், டெல்லி அரசு அதன் பட்ஜெட்டில் ஒவ்வோர் ஆண்டும் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு 40% செலவிடுகிறது. இன்று அனைத்து அமைப்புகளும் எங்களுக்கு பின்னால் உள்ளன. மணீஷ் சிசோடியாவின் தவறு என்னவென்றால், அவர் நல்ல பள்ளி கூடங்களை கட்டினார்.
சத்யேந்திர ஜெயினின் தவறு என்னவென்றால், நல்ல மருத்துவமனைகளையும் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளையும் அவர் கட்டினார். சிறந்த பள்ளி உட்கட்டமைப்புக்கு பணியாற்றவில்லை என்றால், சிசோடியா கைது செய்யப்பட்டு இருக்கமாட்டார். அவர்கள் எல்லாவித சதித்திட்டங்களையும் செய்தனர். ஆனால், எங்களை தடுக்க முடியாது என்று பேசியுள்ளார்.