இந்திய உணவு கழக ஊழல் விவகாரம்: 50 இடங்களில் சி.பி.ஐ. சோதனை - துணை பொதுமேலாளர் கைது


இந்திய உணவு கழக ஊழல் விவகாரம்: 50 இடங்களில் சி.பி.ஐ. சோதனை - துணை பொதுமேலாளர் கைது
x

கோப்புப்படம்

இந்திய உணவு கழக ஊழல் தொடர்பாக 3 மாநிலங்களில் 50 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. உணவு கழக துணை பொது மேலாளர் கைது செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

இந்திய உணவு கழகம், மத்திய அரசால் உருவாக்கப்பட்டு நடத்தப்பட்டு வரும் ஒரு சட்டபூர்வ அமைப்பு ஆகும். மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகத்தால் இந்த கழகம் நடத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகளிடம் உணவு தானியங்களை கொள்முதல் செய்து சேகரித்து வைப்பதும், பொது வினியோகத் திட்டத்துக்கு உணவு தானியங்களை அனுப்பி வைப்பதும் இதன் பணி ஆகும்.

இதற்கிடையே, இந்திய உணவு கழகத்தில் ஊழல் நடப்பதாக சி.பி.ஐ.க்கு புகார்கள் வந்தன. உணவு தானிய கொள்முதல், சேமித்து வைத்தல், வினியோகம் ஆகியவற்றில் இந்திய உணவு கழக அதிகாரிகளுக்கும், அரிசி மில் உரிமையாளர்கள், தானிய வியாபாரிகள் ஆகியோருக்கும் இடையே ஊழல் கூட்டணி ஏற்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன.

கைது

அதுதொடர்பாக சி.பி.ஐ. 6 மாதங்களாக உளவு பார்த்தது. அதில், புகாருக்கு முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது.

இந்தநிலையில், ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது இந்திய உணவு கழக துணை பொது மேலாளர் கையும், களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, பஞ்சாப், அரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் மொத்தம் 50 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

அதிகாரிகள் தொடர்பு

டெல்லியில் 2 இடங்களில் மட்டும் சோதனை நடந்தது. பஞ்சாப், அரியானாவில் பல்வேறு நகரங்களில் 48 இடங்களில் நடத்தப்பட்டது.

இந்திய உணவு கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளர்கள் முதல் செயல் இயக்குனர்கள்வரை அதிகாரிகளின் தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசு ஊழியர்கள் தொடர்பும் விசாரிக்கப்பட்டு வருகிறது.


Next Story