வெள்ளி பட்டறை தொழிலாளி மீது திராவகம் வீச்சு; நண்பர் கைது
பெங்களூருவில், வெள்ளி பட்டறை தொழிலாளி மீது திராவகம் வீசிய நண்பர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு:
திராவகம் வீச்சு
மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் ஜனதா அதக். இவர் பெங்களூரு கப்பன்பேட்டையில் உள்ள வெள்ளி பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்தார். அந்த பட்டறையில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த மண்டு சந்திரா என்பவரும் வேலை செய்தார். ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஜனதா, மண்டு ஆகியோர் நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஜனதா, மண்டு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. அதுபோல கடந்த 29-ந் தேதி இரவும் வெள்ளி பட்டறையில் வைத்து ஜனதா, மண்டு இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ஜனதா வெள்ளி நகைகளை பாலீஷ் செய்ய பயன்படுத்தப்படும் திராவகத்தை எடுத்து மண்டுவின் மேல் வீசியதாக தெரிகிறது.
ஆஸ்பத்திரியில் அனுமதி
இதனால் மண்டுவின் கை, கால், மார்பு பகுதியில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜனதா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் மண்டுவை மீட்டு சிகிச்சைக்காக விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் அல்சூர்கேட் போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரித்தனர். பின்னர் ஜனதாவை தேடினர்.
மைசூருவில் கைது
அப்போது அவர் பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு தப்பி சென்று விட்டதாகவும், அங்கிருந்து தனது சொந்த ஊருக்கு தப்பி செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் அல்சூர்கேட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மைசூருவுக்கு விரைந்த அல்சூர்கேட் போலீசார் அங்கு பதுங்கி இருந்த ஜனதாவை கைது செய்தனர். அவரை பெங்களூருவுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலை ஏற்க மறுத்ததால் சுங்கதகட்டேயில் இளம்பெண் மீது வாலிபர் திராவகம் வீசிய சம்பவத்தின் சுவடு மறைவதற்குள் பெங்களூருவில் மீண்டும் ஒரு திராவக வீச்சு சம்பவம் அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.