பெங்களூரு-கலபுரகி இடையே முதல் விமான சேவை
பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள 2-வது முனையத்தில் இருந்து பெங்களூரு-கலபுரகி இடையே முதல் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
தேவனஹள்ளி:
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 2-வது முனையம் நிறுவப்பட்டு உள்ளது. இந்த 2-வது முனையம் வருகிற 15-ந் தேதி முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்த நிலையில் புதிய முனையத்தில் இருந்து பெங்களூரு-கலபுரகி இடையே முதல் விமானம் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஸ்டார் ஏர் என்ற விமான நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சிம்ரன்சிங் கூறியதாவது:-
பெங்களூரு விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் இருந்து வருகிற 15-ந் தேதி முதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளது. எங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் பெங்களூருவில் இருந்து கலபுரகிக்கு இயங்குகிறது. 15-ந் தேதி காலை 8.40 மணிக்கு புறப்படும் விமானம் காலை 9.45 மணிக்கு கலபுரகிக்கு செல்கிறது. கலபுரகியில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்படும் விமானம் காலை 11.25 மணிக்கு பெங்களூரு விமான நிலையம் வருகிறது. அதே விமானம் காலை 11.55 மணிக்கு பெங்களூருவில் இருந்து உப்பள்ளிக்கு புறப்பட்டு செல்கிறது. மதியம் 12.55 மணிக்கு அந்த விமானம் உப்பள்ளிக்கு சென்றடையும். பின்னர் இரவு 7.25 மணிக்கு உப்பள்ளியில் இருந்து புறப்படும் விமானம் இரவு 8.25 மணிக்கு பெங்களூருவுக்கு வந்தடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.