சீனாவை ஆட்டி படைக்கும்....பிஎப்-7 ஒமைக்ரான் வகை கொரோனா இந்தியாவிலும் பரவல் என அதிர்ச்சி தகவல்
சீனாவில் அதிவேக கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக கருதப்படும் பிஎப்-7 ஒமைக்ரான் திரிபு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
சீனாவில் 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று நமது நாட்டில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது.
ஆனால் சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது கொரோனா தொற்று திடீர் எழுச்சி பெற்று வேகமாக பரவி வருகிறது.
இதையொட்டி மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று காலை அவசர ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு நடக்கிற கூட்டத்தில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், எய்ம்ஸ் இயக்குனர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவும், முகக்கவசம் கட்டாயம் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தநிலையில், சீனாவில் அதிவேக கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக கருதப்படும் பிஎப்-7 ஒமைக்ரான் திரிபு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குஜராத்தில் 2 பேரும் ஒடிசாவில் ஒருவரும் பிஎப்-7 ஒமைக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.