போபாலில் அரசாங்க வீட்டுவசதி அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து
மத்திய பிரதேச மாநில தலைநகரான போபாலில் அரசாங்க வீட்டுவசதி அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
போபால்,
மத்திய பிரதேச அரசின் பல்வேறு துறைகளுக்கு சொந்தமான சத்புரா பவன் என்ற கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சத்புரா பவனின் மூன்றாவது மாடியில் இருந்து ஆறாவது மாடிக்கும் தீ பரவியது.
ஊழியர்கள், அலுவலர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. கட்டிடத்தில் உள்ள பர்னிச்சர் மற்றும் ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தீயை அணைக்கும் பணியில் 15 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தற்போது தீ 50 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயை முழுவதும் அணைக்க இந்திய விமானப்படையின் உதவியை மாநில அரசு நாடியுள்ளது.
இது தொடர்பாக மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மத்திய பாதுகாப்புதுறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் பேசி ஏற்பாடு செய்துள்ளதாகவும், இதன்படி இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் தீயை அணைக்கு பணியில் ஈடுபடுத்தப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருவதால், தீ விபத்துக்கான சரியான காரணத்தை உடனடியாக அறிய முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.