"எனது விவகாரத்தை பா.ஜனதா அரசியலாக்க வேண்டாம்" - சுவாதி மாலிவால்
ஆம் ஆத்மி கட்சி பெண் எம்.பி. சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறை இன்று எப்.ஐ.ஆர். பதிவு செய்தது.
புதுடெல்லி,
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யும், டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவருமான சுவாதி மாலிவால், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து ஆம் ஆத்மி தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்தது. இந்த சம்பவம் டெல்லி அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி பெண் எம்.பி. சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமார் மீது டெல்லி காவல்துறை இன்று எப்.ஐ.ஆர். பதிவு செய்தது. முன்னதாக சுவாதி மாலிவால், ஆம் ஆத்மி கட்சித் தலைவரின் வீட்டில், குமார் தன்னைத் தாக்கியதாக போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்த சூழலில் இன்று இரவு சமூக வலைதளத்தில் சுவாதி மாலிவால் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு நடந்தது மிகவும் மோசமானது. இந்த சம்பவம் குறித்து போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். கடந்த சில நாட்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி கூறுகிறேன். எனது குணத்தை தவறாக சித்தரிக்க (character assassination) முயன்றவர்கள், வேறு தரப்பினரின் அறிவுறுத்தலின் பேரில் செய்கிறேன் என்று கூறியவர்கள் அனைவரையும் கடவுள் மகிழ்ச்சியாக வைத்திருக்கட்டும்.
"நாட்டில் முக்கியமான தேர்தல் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. சுவாதி மாலிவால் முக்கியமல்ல, நாட்டின் பிரச்னைகள் தான் முக்கியம். இந்த சம்பவத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று பா.ஜனதாவில் உள்ளவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன், " என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.