கங்கா கல்யாண திட்டத்தில் முறைகேடு; 3 அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு


கங்கா கல்யாண திட்டத்தில் முறைகேடு; 3 அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 20 May 2023 12:15 AM IST (Updated: 20 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கங்கா கல்யாண திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக மூன்று அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு:

கர்நாடக அம்பேத்கர் வாரியத்தின் கீழ் கங்கா கல்யாண திட்டம் கொண்டு வரப்பட்டது. அதாவது எஸ்.சி. எஸ்.டி. சமூகத்தில் இருக்கும் விவசாயிகளின் தோட்டத்திற்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்க கங்கா கல்யாண திட்டம் கொண்டு வரப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கடந்த 2019-20-ம் ஆண்டிலும், 2020-21-ம் ஆண்டிலும் கங்கா கல்யாண திட்டத்தில் போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்து பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் வாரியத்தின் முன்னாள் இயக்குனராக இருந்த சுரேஷ், முன்னாள் செயலாளர் பிரகாஷ், என்ஜினீயர் சீதாராம் ஆகிய 3 பேரும் போலி ஆவணங்களை தயாரித்து டெண்டர் விட்டு இருந்ததும் தெரிந்தது.

அந்த டெண்டர்களை எடுத்த ஒப்பந்ததாரர்களிடம் இருந்து 3 அதிகாரிகளும் பணம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பெங்களூரு விதானசவுதா போலீஸ் நிலையத்தில் அம்பேத்கர் வாரியத்தின் இயக்குனர் நாகேஷ் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், 3 அரசு அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் விசாரணைக்கு ஆஜராக 3 பேருக்கும் நோட்டீசு அனுப்பி வைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story