பெண் நிருபரை தாக்கி, தகாத முறையில் நடந்த பட தயாரிப்பாளர்
ஒடியா மகளிர் ஆணையமும் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, 15 நாட்களில் அறிக்கை அளிக்கும்படி போலீசாரிடம் கேட்டு கொண்டுள்ளது.
புவனேஸ்வர்,
ஒடியாவில் புவனேஸ்வர் நகரில் திரையரங்கம் ஒன்றில் ஒடியா திரைப்படம் ஒன்றின் வெளியீட்டின்போது, பத்திரிகையாளர்கள் வருகை தந்துள்ளனர்.
அப்போது, பட தயாரிப்பாளரான சஞ்சய் என்ற துது நாயக், பெண் நிருபர் ஒருவரை தாக்கியுள்ளார். இதுபற்றி அந்த நிருபர் கர்வேலா நகர் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளார்.
தேபஸ்மிதா ரூத் என்ற அந்த பெண் நிருபர் கூறும்போது, தாக்குதலால் நான் அதிர்ச்சி அடைந்தேன். என்னுடைய மைக் மற்றும் மொபைல் போன் கீழே விழுந்து விட்டன.
அவற்றை எடுப்பதற்காக கீழே அமர்ந்தபோது, பின்னால் என்னை அடித்து விட்டார். அவர் ஏன்? அப்படி என்னிடம் நடந்து கொண்டார் என எனக்கு தெரியவில்லை என்று குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, துது நாயக் மீது 354, 323, 341 மற்றும் 294 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். அவருக்கான ஜாமீன் மனுவை உள்ளூர் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
அவருக்கு எதிராக 14 நாட்கள் நீதிமன்ற காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், அவரை போலீசார் ஜர்படா சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து ஒடிசாவின் பெண் பத்திரிகையாளர்களுக்கான அமைப்பின் உறுப்பினர்கள் சேர்ந்து, துணை காவல் ஆணையாளரிடம் புகார் ஒன்றை அளித்தனர்.
சம்பவம் பற்றி முறையான விசாரணை நடத்த கோரியுள்ளனர். இதுபற்றி ஒடியா மகளிர் ஆணையமும் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, 15 நாட்களில் அறிக்கை அளிக்கும்படி போலீசாரிடம் கேட்டு கொண்டுள்ளது.