கள்ளக்காதலை கைவிட மறுத்த பெண் போலீசை கொன்றுவிட்டு சகோதரர் தற்கொலை
கள்ளக்காதலை கைவிட மறுத்த பெண் போலீசை கொன்று விட்டு சிவமொக்கா தங்கும் விடுதியில் தூக்குப்போட்டு சகோதரர் தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் எழுதிய கடிதத்தில் பகீர் தகவல்கள் தெரியவந்தது.
சிவமொக்கா;
வாலிபர் தற்கொலை
சிவமொக்கா டவுன் பகுதியில் உள்ள அரசு பஸ் நிலையம் அருகே தனியார் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதிக்கு துமகூரு மாவட்டம் கெரேசூரகொண்டனஹள்ளி கிராமத்தை சோ்ந்த மஞ்சுநாத் (வயது 26) என்ற வாலிபர் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை நீண்ட நேரம் ஆகியும் மஞ்சுநாத்தின் அறை திறக்கப்படாமல் இருந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த விடுதி உரிமையாளர் அறையை தட்டி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கதவை திறக்கவில்லை. இதுகுறித்து உரிமையாளர், தொட்டபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்போில் போலீசார் அந்த விடுதிக்கு விரைந்து வந்து மஞ்சுநாத் தங்கி இருந்த அறையின் கதவை மாற்றுசாவி போட்டு திறந்துபார்த்துள்ளனர். இதில் மஞ்சுநாத் அறையில் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்தது தெரியவந்தது.
பெண் போலீசை கொன்றுவிட்டு...
மேலும் அங்கு அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக எழுதிய கடிதம் ஒன்று சி்க்கியது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.அந்த கடிதத்தில் `நான், எனது பெரியம்மாவின் மகள் சுதாவை கொலை செய்துவிட்டதாகவும், அவளது உடலை ஊருக்குள் வெளியில் வீசியதாகவும் எழுதி இருந்தார்.
மேலும் சுதாவிற்கு திருமணம் முடிந்துவிட்டது. அவள் கள்ளக்காதலுடன் சோ்ந்து கணவனை கொலை செய்துவிட்டதாகவும், இதனால் கோபமடைந்து சுதாவை கொலை செய்து விட்டு தான் தற்கொலை செய்துகொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் மஞ்சுநாத் உடலை பிரேத பரிசோதனைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிவமொக்கா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவம் பற்றி துமகூரு போலீசாருக்கு தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
அப்போது விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியானது. அதாவது கொலையான சுதா(வயது 39) துமகூரு மாவட்டம் ஹூலியார் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்ததுள்ளார். கள்ளக்காதலனுடன் சேர்ந்து சுதா, கணவரை கொன்றதால் ஆத்திரத்தில் அவரை சகோதரர் மஞ்சுநாத் தீர்த்து கட்டியுள்ளார்.
பின்னர் சுதாவின் உடலை ஹாசன் மாவட்டம் அரிசிகெரே-திப்தூர் தேசிய நெடுங்சாலை மயிலானஹள்ளி சாலையோரம் வீசிவிட்டு சிவமொக்கா தங்கும் விடுதிக்கு வந்து அறை எடுத்து தங்கி மஞ்சுநாத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அரிசிகெரே புறநகர் போலீசார், சுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.