பெண் எம்.பி. சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் மவுனம் கலைத்த ஆம் ஆத்மி கட்சி


பெண் எம்.பி. சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் மவுனம் கலைத்த ஆம் ஆத்மி கட்சி
x
தினத்தந்தி 15 May 2024 8:09 AM GMT (Updated: 16 May 2024 9:26 AM GMT)

உதவியாளர் பிபவ் குமார் மீது கெஜ்ரிவால் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்று சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யும், டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவருமான சுவாதி மாலிவால் நேற்று முன்தினம் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டுக்கு சென்றிருந்தபோது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. எனினும் இது குறித்து ஆம் ஆத்மி தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்தது. இந்த சம்பவம் டெல்லி அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள், சுவாதி மாலிவால் விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சி மவுனம் காப்பது ஏன்? என்றும் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் "அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் சந்திக்க சுவாதி மாலிவால் சென்றிருந்தார். அவர் அறையில் காத்திருந்தபோது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார், அவரிடம் தவறாக நடந்துகொண்டார். இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல். கெஜ்ரிவால் இதை கவனத்தில் கொண்டு இந்த சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை எடுப்பார்" என்றார்.


Next Story