மேற்கு வங்காளத்தில் பெண் ஒப்பனை கலைஞர் தூக்கு போட்டு தற்கொலை


மேற்கு வங்காளத்தில் பெண் ஒப்பனை கலைஞர் தூக்கு போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 30 May 2022 10:09 AM IST (Updated: 30 May 2022 10:11 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் அடுத்தடுத்து இளம் திரை பிரபலங்கள், மாடல் அழகிகள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் கஸ்பா பகுதியில் வசித்து வந்த இளம்பெண் சரஸ்வதி தாஸ் (வயது 18). ஒப்பனை கலைஞராக செயல்பட்டு வந்த அவர் மாடலிங் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், அவர் வசித்த வீட்டில் தூக்கிட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இது தற்கொலையாக இருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரது தந்தை பிரிந்து சென்ற பின்னர் தாய்மாமன் வீட்டில் தனது தாயார் ஆரத்தி தாஸ் உடன் கடந்த 17 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்துள்ளார். பாட்டியுடன் அறையில் ஒன்றாக தங்கியிருக்கும் அவர், சம்பவத்திற்கு முந்தின நாள் இரவில் அறைக்கு சென்று படுத்துள்ளார்.

ஆனால், நள்ளிரவில் அறையில் அவரை காணவில்லை. இதனால், பாட்டி எழுந்து சென்று பார்த்ததில், மற்றொரு அறையில் மின் விசிறியில் துப்பட்டாவை கொண்டு தூக்கு போட்டு உள்ளார்.

இதன்பின் அவரை கீழே இறக்கி, மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவமனை தெரிவித்து உள்ளது. அவரது மொபைல் போனை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

அந்த பகுதியில் தற்கொலை குறிப்பு எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்பு கல்வியை அவர் தொடரவில்லை. டியூசன் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்த அவர் மாடலிங் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது இறப்புக்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் அடுத்தடுத்து இளம் திரை பிரபலங்கள், மாடல் அழகிகள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. கடந்த 15ந்தேதி வங்காளத்தின் பிரபல தொலைக்காட்சி நடிகையான பல்லவி டே கொல்கத்தாவில் உள்ள தனது குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

பிரபல மாடல் மற்றும் வங்காள மொழி படத்திலும் நடித்துள்ள பிதிஷா டி மஜும்தார் 21 வயதில், தனது குடியிருப்பில் கடந்த 25ந்தேதி மாலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொடர்ந்து கடந்த 27ந்தேதி, பிதிஷாவின் தோழியான மற்றும் கொல்கத்தாவின் மாடலான மஞ்சுஷா நியோகி என்பவரும் தற்கொலை செய்துள்ளார். ஒரே மாதத்தில் கொல்கத்தாவில் திரை பிரபலங்கள் மற்றும் மாடல் அழகிகள் என அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.


Next Story