கடந்த 5 ஆண்டுகளில் 1,827 தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்


கடந்த 5 ஆண்டுகளில் 1,827 தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
x

கோப்புப்படம்

கடந்த 5 ஆண்டுகளில், 1,827 தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறியதாவது:-

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ், வெளிநாட்டு நன்கொடை பெற 16 ஆயிரத்து 383 தொண்டு நிறுவனங்கள் உரிமம் பெற்றுள்ளன.

இந்த சட்டத்தின் விதிமுறைகளை மீறியதற்காக, கடந்த 5 ஆண்டுகளில், 1,827 தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.

காலி இடங்கள்

மற்றொரு கேள்விக்கு நித்யானந்த் ராய் அளித்த பதில் வருமாறு:-

சி.ஆர்.பி.எப்., எல்லை பாதுகாப்பு படை உள்ளிட்ட 6 துணை ராணுவப்படைகளில் ஒப்புதல் அளிக்கப்பட்ட வீரர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 5 ஆயிரத்து 520 ஆகும். இவற்றில் 84 ஆயிரத்து 866 பணியிடங்கள் காலியாக உள்ளன.

அதிகபட்சமாக சி.ஆர்.பி.எப்.பில் 29 ஆயிரத்து 283 பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 5 மாதங்களில், 31 ஆயிரத்து 785 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தற்கொலை

கடந்த 3 ஆண்டுகளில் மத்திய துணை ராணுவப்படைகளில் 436 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தற்கொலையை தடுக்க அதற்கான காரணிகளை அடையாளம் கண்டு பரிந்துரைக்க ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.


Next Story