தந்தைகள், மகன்கள், மகள்கள் களம் கண்ட நிலையில்


தந்தைகள், மகன்கள், மகள்கள் களம் கண்ட நிலையில்
x

கர்நாடக சட்டசபை தேர்தலில் தந்தை, மகன், மகள் என போட்டியிட்டவர்கள் வெற்றி மகுடம் சூடியுள்ளனர்.

பெங்களூரு:-

குடும்பத்தில் 2 பேருக்கு வாய்ப்பு

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தந்தை-மகன், தந்தை-மகள் என்று பலர் களத்தில் இறங்கி இருந்தார்கள். அதாவது வாரிசுகளுக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டு இருந்தது.

ஒரே குடும்பத்தில் 2 பேருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. அதாவது முன்னாள் மத்திய மந்திரி கே.எச்.முனியப்பா, அவரது மகள் ரூபா கலா சசிதர், ராமலிங்க ரெட்டி, அவரது மகள் சவுமியா ரெட்டி, சாமனூர் சிவசங்கரப்பா, அவரது மகன் மல்லிகார்ஜுன், எம்.கிருஷ்ணப்பா, அவரது மகன் பிரியா கிருஷ்ணா ஆகியோர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு இருந்தனர்.

அவர்களில் பெங்களூரு பி.டி.எம். லே-அவுட்டில் ராமலிங்க ரெட்டியும், ஜெயநகர் தொகுதியில் சவுமியா ரெட்டியும், பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி தொகுதியில் கே.எச்.முனியப்பாவும், கோலார் தங்கவயல் தொகுதியில் ரூபா கலா சசிதரும் வெற்றி பெற்று, தந்தை, மகளாக சட்டசபைக்குள் கால் எடுத்து வைக்க உள்ளனர்.

தந்தை, மகன் வெற்றி

இதுபோல், பெங்களூரு விஜயநகர் தொகுதியில் கிருஷ்ணப்பாவும், கோவிந்தராஜநகர் தொகுதியில் பிரியா கிருஷ்ணாவும், தாவணகெரெ(மாவட்டம்) தெற்கு தொகுதியில் சாமனூர் சிவசங்கரப்பாவும், அவரது மகன் மல்லிகார்ஜுன் தாவணகெரே வடக்கு தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதன்மூலம் இவர்கள் 4 பேரும் தந்தை, மகனாக சட்டசபைக்குள் நுழைய உள்ளனர்.

இதே ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு தொகுதியில் ஏ.மஞ்சு போட்டியிட்டு இருந்தார். இவருடைய மகப் மந்தர்கவுடா காங்கிரஸ் கட்சியில் உள்ளார். அவர் குடகு மாவட்டம் மடிகேரி தொகுதியில் போட்டியிட்டு இருந்தார். இந்த நிலையில், அரக்கல்கோடு தொகுதியில் ஏ.மஞ்சுவும், மடிகேரி தொகுதியில் மந்தர்கவுடாவும் வெவ்வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள்.

நிகில் மட்டும் தோல்வி

ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரிநகர் தொகுதியில் போட்டியிட்ட ஜி.டி.தேவேகவுடாவும், அதே கட்சி சார்பில் அவரது மகன் ஹரீஷ் கவுடா மைசூரு மாவட்டம் உன்சூர் தொகுதியிலும் போட்டியிட்டு இருந்தார்கள். நேற்று தேர்தல் முடிவுகளின் போது ஜி.டி.தேவேகவுடாவும், முதல் முறையாக போட்டியிட்ட ஹரீஷ் கவுடாவும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அதே நேரத்தில் இந்த தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் தந்தை, மகனாக போட்டியிட்ட முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெற்றி பெற்றிருந்தாலும், அவரது மகன் நிகில் குமாரசாமி மட்டும் தோல்வியை தழுவி உள்ளார்.

ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் குமாரசாமி வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் ராமநகர் தொகுதியில் நிகில் தோல்வி அடைந்தார். இதன் காரணமாக முன்னாள் பிரதமர் தேவேகவுடா வேதனை அடைந்துள்ளார். தனது பேரன் நிகிலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த போது, பேரனை வெற்றி பெற வைக்கும்படி தேவேகவுடா கண்ணீர் மல்க பேசி வாக்கு சேகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எடியூரப்பா மகன்

அதுபோல் பா.ஜனதாவில் எடியூரப்பா மகன் விஜயேந்திரா சிகாரிப்புராவில் வெற்றி பெற்றார். ஆனால் முன்னாள் மந்திரி ஆனந்த் சிங் மகன் சித்தார்த் விஜயநகர் தொகுதியில் தோல்வி அடைந்தார். ஆனால் எடியூரப்பா, ஆனந்த் சிங் தேர்தலில் போட்டியிடவில்லை.

மேலும் கலபுரகி மாவட்டம் சித்தாபுரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மகன் பிரியங்க் கார்கே வெற்றிக்கனியை ருசித்துள்ளார்.


Next Story