லாரி மீது கார் மோதிய விபத்தில் தந்தை பலி
திருப்பதி கோவிலுக்கு சென்று திரும்பும் வழியில் லாரி மீது கார் மோதிய விபத்தில் மைசூரு கலால்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு தந்தை பலியானார். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோலார்
உன்சூர் கலால்துறை டி.எஸ்.பி.
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் உன்சூர் கலால் துறை துணை போலீஸ் சூப்பிரண்டாக (டி.எஸ்.பி.) இருப்பவர் விஜய்குமார். இவரது தந்தை கிரிகவுடா (வயது 80).
இந்த நிலையில் விஜய்குமார் தனது தந்தை, தாயுடன் காரில் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தார்.
அதன்படி ஒரு காரில் விஜய்குமார், தாய், தந்தை மற்றும் குடும்பத்தினர் மற்றும் கலால்துறை இன்ஸ்பெக்டர் லோகேஷ் ஆகியோருடன் காரில் சென்றார்.
இந்த நிலையில் அங்கு தரிசனத்தை முடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு உன்சூருக்கு அவர்கள் காரில் புறப்பட்டு வந்தனர்.
தந்தை பலி
ஆந்திர மாநிலம் பலேமனார் புறநகரில் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் விஜய்குமாரின் தந்தை கிரிகவுடா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் விஜய்குமார், அவரது தாய், இன்ஸ்பெக்டர் லோகேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் கோலாரில் உள்ள ஜாலப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சோகம்
இந்த விபத்து தொடர்பாக பலேமனார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருப்பதி கோவிலுக்கு சென்று திரும்பும் வழியில் துணை போலீஸ் சூப்பிரண்டின் தந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.