மத்திய அரசை கண்டித்து டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்
கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து டெல்லியில் நேற்று மீண்டும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆயிரக் கணக்கானோர் திரண்டதால் தலைநகரில் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு இயற்றிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்தும், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வலியுறுத்தியும் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
14 மாத போராட்டம்
எல்லைப்பகுதிகளான காஜிப்பூர், சிங்கு, திக்ரி ஆகிய இடங்களில் பிரமாண்ட அளவில் இந்த போராட்டத்தை மேற்கொண்டனர்.
இதில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். இந்த போராட்டத்தின்போது பல விவசாயிகள் உயிரிழந்தனர். 14 மாதங்கள் நீடித்த இந்த போராட்டம், அரசின் உத்தரவாதத்தின் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் கைவிடப்பட்டது.
'மகா பஞ்சாயத்து'
ஆனால் பேச்சுவார்த்தையின்போது கூறிய வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை எனக்கூறி விவசாயிகள் மீண்டும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளை வலியுறுத்தியும், குறைந்தபட்ச ஆதரவுவிலைக்கு சட்டம், விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளை காரை ஏற்றி கொலை செய்த விவகாரத்தில் மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும், ஏற்கனவே வாக்குறுதி அளித்த கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்தும் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று ஒரு நாள் அமைதி வழியில் இந்த போராட்டம் (மகா பஞ்சாயத்து) முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
சம்யுக்தா கிஷான் மோர்ச்சா பேரமைப்பின் கீழ் உள்ள 40-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் பங்கேற்கும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
டெல்லியை நோக்கி படையெடுப்பு
இதைத்தொடர்ந்து இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து குறிப்பாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்தனர்.
இந்த போராட்டத்தின் தீவிரத்தை முன்கூட்டியே உணர்ந்த போலீசார் அவர்களை எல்லைப்பகுதிகளிலேயே தடுத்து நிறுத்தினர். இதற்காக டெல்லியை ஒட்டியுள்ள காஜிப்பூர், சிங்கு மற்றும் திக்ரி எல்லைப்பகுதிகளில் இரும்பு மற்றும் கான்கிரீட் கட்டைகளால் தடுப்புவேலி அமைக்கப்பட்டது. அந்த வழியாக வாகனங்களில் வந்த விவசாயிகள் அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
மேலும் விவசாய அமைப்பின் மூத்த தலைவர் ராகேஷ் திகாயத் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். நேற்றும் காஜிப்பூர் எல்லையில் 19 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
பேரணி, ஆர்ப்பாட்டம்
இருப்பினும் ஏராளமான விவசாயிகள் பல வழிகளில் ஜந்தர் மந்தரில் குவிந்து விட்டனர். ஆனால் ஜந்தர் மந்தர் சாலையிலும் விவசாயிகள் உள்ளே நுழையாதபடி போலீசார் இரும்பு வேலிகளை அமைத்திருந்தனர். ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் விவசாயிகள் அந்த தடுப்புகளில் ஏறி குதித்தனர். போலீசாரால் அவர்களை தடுக்க முடியவில்லை.
ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கில் குவிந்த விவசாயிகள் அங்கு பேரணி, ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை கோஷமாக முழங்கி ஆர்ப்பரித்தனர். இது விவசாயிகளின் பிரமாண்ட எழுச்சியாக தெரிந்தது. இந்த போராட்டக்காரர்களுக்கு மத அமைப்பினர் சார்பில் உணவு, தண்ணீர் மற்றும் தின்பண்டங்கள் வழங்கப்பட்டன.
ஆயிரக்கணக்கான விவசாயிகள்
பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்கள் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கில் விவசாயிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பெரும்பாலானவர்கள் தங்கள் மாநிலங்களின் பாரம்பரிய உடைகள், தேசியக்கொடி நிறத்திலான ஆடைகள், விளைபொருட்களால் ஆன மாலைகள் போன்றவற்றை அணிந்து தனித்துவமாக கலந்து கொண்டனர்.
கேரளாவில் இருந்து 250-க் கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் பங்கேற்றதாக தகவல் வெளியாகி உள்ளன. மாநிலத்தில் இருந்து ஆதிவாசி உடையில் பங்கேற்ற சிராஜ் கொடியறிவ் என்ற 64 வயது விவசாயி போராட்டக்களத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
போக்குவரத்து நெரிசல்
இதற்கிடையே டெல்லி எல்லைப்பகுதியில் வாகனங்களை தீவிர ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே நகருக்குள் போலீசார் அனுமதித்தனர். இதனால் 3 எல்லைகளிலும் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பல இடங்களில் போக்குவரத்து மாற்றப்பட்டு இருந்தது.
இதைப்போல ஜந்தர் மந்தரை சுற்றியுள்ள ஜன்பத் சாலை, அசோகா சாலை மற்றும் கன்னாட் பிளேஸ் பகுதிகளிலும் வாகன போக்குவரத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இந்த காரணங்களால் டெல்லி நகருக்குள்ளும் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
இவ்வாறு விவசாயிகளின் போராட்டத்தால் தலைநகர் டெல்லியில் நேற்று பெரும் பரபரப்பு நிலவியது.
ஜனாதிபதிக்கு கடிதம்
இந்த போராட்டம் தொடர்பாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா சார்பில் ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
விவசாயிகளின் பிரச்சினையை அரசு கையாளும் விதத்துக்கு எதிரான எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கவே இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறோம். எங்கள் அமைப்புடன் வேளாண் அமைச்சகம் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ந்தேதி ஒப்பந்தம் செய்தது. அதன்படியே, அப்போது நாங்கள் போராட்டத்தை நிறுத்தினோம்.
ஆனால் அந்த ஒப்பந்தத்தை இன்றுவரை அரசு நிறைவேற்றவில்லை. அதுமட்டுமல்லாமல், சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
எனவே, சம்யுக்தா கிசான் மோர்ச்சாவுடனான ஒப்பந்தத்தை நிறைவேற்றவும், கடந்த 17-ந்தேதி நாங்கள் பிரதமருக்கு அனுப்பிய கோரிக்கையை ஏற்று மந்திரி சபைக்கு ஆலோசனை வழங்கவும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.