புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு


புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
x

பொங்கல் விழாவை முன்னிட்டு திருவனந்தபுரம் முழுக்க பெண்கள் அடுப்பு மூட்டி பொங்கலிட்டதால் எங்கும் புகை மூட்டமாக காணப்பட்டது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்கல் விழா நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு வழிபடுவார்கள்.

இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது. பிரசித்தி பெற்ற பொங்கல் விழா இன்று நடந்தது. இதற்காக திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள பண்டார அடுப்பில் காலை 10.30 மணிக்கு கோவில் பூசாரி தீ மூட்டி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து திருவனந்தபுரம் நகர் முழுக்க பெண்கள் அடுப்பு மூட்டி பொங்கலிட்டனர். திருவனந்தபுரம் முழுக்க பொங்கலிட்ட பெண் பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. இதுபோல மலர்களும் தூவப்பட்டது.

இன்று மதியம் 2.30 மணிக்கு பொங்கல் நைவேத்தியம் வழங்கப்படுகிறது.அதன்பிறகு தொடர்ந்து விழா நடைபெறுகிறது. ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு திருவனந்தபுரம் முழுக்க பெண்கள் அடுப்பு மூட்டி பொங்கலிட்டதால் எங்கும் புகை மூட்டமாக காணப்பட்டது.

மேலும் தெருக்கள் மட்டுமின்றி சாலையோரமும் பெண்கள் பொங்கலிட இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் நகரில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டிருந்தது.


Next Story