பாகிஸ்தான் பத்திரிகையாளரை இந்தியாவுக்கு அழைக்கவில்லை - முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மறுப்பு


பாகிஸ்தான் பத்திரிகையாளரை இந்தியாவுக்கு அழைக்கவில்லை - முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மறுப்பு
x

பாகிஸ்தான் பத்திரிகையாளரை இந்தியாவுக்கு அழைத்தார் என்ற பாஜக குற்றச்சாட்டை முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மறுத்துள்ளார்.

புதுடெல்லி,

பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளரான நஷ்ரத் மிஸ்ரா என்பவர், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 5 முறை இந்தியா வந்ததாகவும், இங்கிருந்து திரட்டிய முக்கிய தகவல்களை அந்த நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு வழங்கியதாகவும் கூறியுள்ளதாக தெரிகிறது.

மேலும் அப்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் அழைப்பின் பேரில் இந்தியா வந்ததாகவும், இந்தியாவில் அவரை சந்தித்ததாகவும் அவர் கூறியிருப்பதாகவும் பாஜக கூறியுள்ளது. பாஜக செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா இந்த தகவலை வெளியிட்டு, காங்கிரசையும், ஹமீது அன்சாரியையும் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் அந்த பத்திரிகையாளரை அழைக்கவோ, சந்திக்கவோ இல்லை என ஹமீது அன்சாரி மறுத்துள்ளார். இது தன் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பொய்கள் என்றும் கூறியுள்ளார்.

இந்திய துணை ஜனாதிபதியால் வெளிநாட்டு பிரமுகர்களுக்கு விடுக்கப்படும் அழைப்பிதழ்கள் அனைத்தும், அரசின் ஆலோசனையின் பேரில் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் வழங்கப்படும் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் ஹமீது அன்சாரி கூறியுள்ளார்.

இதைப்போல ஈரான் தூதராக இருந்தபோது இந்தியாவின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டதாக பாஜக கூறியுள்ள குற்றச்சாட்டையும் அவர் மறுத்துள்ளார்.


Next Story