நீதிபதிகள் நியமனத்தில் கொலீஜியத்தின் பரிந்துரையை கிடப்பில் போடுவது ஜனநாயகத்துக்கு எதிரானது - முன்னாள் நீதிபதி நாரிமன்


நீதிபதிகள் நியமனத்தில் கொலீஜியத்தின் பரிந்துரையை கிடப்பில் போடுவது ஜனநாயகத்துக்கு எதிரானது - முன்னாள் நீதிபதி நாரிமன்
x

ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் கொலீஜியம் பரிந்துரை செய்த பெயர்களை கிடப்பில் போட்டால் அது ஜனநாயகத்துக்கு எதிரான கொடிய செயல் என்று முன்னாள் நீதிபதி நாரிமன் சாடினார்.

நீதிபதிகள் நியமனத்தில் மோதல்

ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நியமனம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் முறை மீது மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக நீதிபதிகள் நியமனத்தில் கொலீஜியம் வெளிப்படையானது அல்ல என்று சாடி வருகிறார்.

இதே போன்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் விழா ஒன்றில் பேசுகையில், தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது, நாடாளுமன்ற இறையாண்மையில் பாதிப்பை ஏற்படுத்தியது என கருத்து தெரிவித்தார்.

விமர்சனங்களுக்கு நாரிமன் பதில்

இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கிற வகையில், மும்பை பல்கலைக்கழகத்தில் நடந்த சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி எம்.சி.சாக்ளா நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொலீஜியத்தின் செயல்முறை தொடர்பாக சட்ட மந்திரி வசைமாரி பொழிந்ததை கேட்டோம். சட்ட மந்திரி கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை அரசியல் சாசன அடிப்படை அம்சங்கள் உண்டு என்று நான் உறுதியாகச் சொல்வேன்.அமெரிக்காவைப் போல் அல்லாமல், குறைந்தபட்சம் 5 நீதிபதிகள், அரசியல் சாசனத்தின் பிரிவு 145 (3) விளக்கத்தின்படி நம்பப்படுகின்றனர். அமெரிக்காவில் இதற்கு இணையாக எதுவும் இல்லை.

தீர்ப்பை பின்பற்றுவது கடமை...

எனவே அரசியல் சாசன அமர்வு என்று அழைக்கப்படுகிற குறைந்தபட்சம் 5 நீதிபதிகள், அரசியலமைப்பினை விளக்குவதற்கு நம்பப்படுகின்றனர். ஒருமுறை அந்த 5 அல்லது அதற்கு கூடுதலான நீதிபதிகள் அரசியல் சாசனத்தை விளக்கிவிட்டால், அரசியல் சாசனம் பிரிவு 144-ன்படி, நீங்கள் அந்த தீர்ப்பை பின்பற்றுவது உங்கள் கடமை ஆகும்.

இப்போது நீங்கள் அதை விமர்சனம் செய்யலாம். ஒரு குடிமகனாக நானும் விமர்சிக்கலாம். அதில் பிரச்சினை இல்லை. ஆனால் என்னைப் போல அல்லாமல், நீங்கள் அதிகாரம் பெற்ற பொறுப்பில் இருக்கிறீர்கள். நான் ஒரு குடிமகன்தான். அந்த தீர்ப்பு, சரியோ தவறோ அதிகாரம் பெற்ற பொறுப்பில் உள்ளவர் என்ற வகையில் நீங்கள் அதற்கு கட்டுப்பட்டவர். இதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.

நீதிபதிகள் நியமன முறை

அடிப்படை கோட்பாட்டின் கட்டமைப்பைப் பற்றிய பிரச்சினை, கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு 2 முறை நடந்திருக்கிறதே தவிர, அதன்பிறகு சமீபகாலமாக, இப்போது நடந்துள்ளதைத் தவிர யாரும் அதற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. அமெரிக்காவைப் பொறுத்தமட்டில் நீதித்துறை நியமனங்களில் நீதித்துறை முடிவு எடுக்கும் செயல்முறை இல்லை. ஆனால் இந்தியா மாறுபட்ட அணுகுமுறையைக் கொண்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக நமக்கு, 1990-கள் வரையில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து நீதிபதிகளை ஜனாதிபதி நியமித்தார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்ன சொன்னாரோ அல்லது பரிந்துரைத்தாரோ அது பின்பற்றப்பட்டது. ஒருவரை நீதிபதியாக நியமிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை விட வேறு யாருக்கு தெரியும்?

அதன் பின்னர் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தவிர்த்து மூத்த நீதிபதிகளும் ஆலோசிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இறுதியில் நீதிபதிகள் நியமன செயல்முறையை நீதித்துறை கையில் எடுத்துக்கொண்டது.

நீதித்துறை சுதந்திரம் என்னவாகும்?

சுதந்திரமான நீதித்துறையின் கடைசி கோடும் வீழ்ந்தால், நாடு புதிய இருண்ட யுகத்தின் படுகுழியில் தள்ளப்பட்டு விடும். சுதந்திரமான மற்றும் அச்சமற்ற நீதிபதிகள் நியமிக்கப்படாவிட்டால் நீதித்துறையின் சுதந்திரம் என்னவாகும்?

பிரபல கார்டூனிஸ்டு ஆர்.கே.லட்சுமனின் சாமானிய மனிதர், உப்பு அதன் சுவையை இழந்துவிட்டால், எதைப் போட்டு அதை சுவையாக்குவது என தனக்குத்தானே ஒரே ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்வார்.

5 நீதிபதிகள் அமர்வு

5 நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு அமர்வு ஒன்று அமைக்கப்பட வேண்டும். கொலீஜியம் நீதிபதிகள் நியமனத்தில் ஒரு பெயரை அரசுக்கு அனுப்பி, 30 நாட்களுக்குள் எதுவும் சொல்லவில்லை என்றால், அதனிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்க வேண்டும்,

சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை செய்த பெயர்களை கிடப்பில் போட்டுவிட்டால், அது நாட்டின் ஜனநாயகத்துக்கு எதிரான மிகவும் கொடிய செயலாகும். ஏனென்றால், நீங்கள் ஒரு குறிப்பிட்ட கொலீஜியத்துக்காக காத்திருந்து, அடுத்த கொலீஜியம் தனது மனதை மாற்றும் என்று நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள். நியாயமான காலத்திற்குள் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story