ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி சம்பாய் சோரன் பா.ஜ.க.வில் இணைந்தார்


ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி சம்பாய் சோரன் பா.ஜ.க.வில் இணைந்தார்
x

Image Courtesy: PTI

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து விலகிய சம்பாய் சோரன் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் சிறை சென்றபோது அம்மாநிலத்தின் முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் சம்பாய் சோரன். சுமார் 5 மாதங்கள் அவர் முதல்-மந்திரியாக இருந்தார். ஹேமந்த் சோரனுக்கு கடந்த ஜூன் இறுதியில் ஜாமீன் கிடைத்த நிலையில், சம்பாய் சோரன் தனது முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டியிருந்தது. அப்போது நடந்த சில விஷயங்கள் தன்னை காயப்படுத்தியதாக சம்பாய் சோரன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும், ஜார்க்கண்ட் மாநில நலனுக்காக பா.ஜ.க.வில் இணைய முடிவெடுத்துள்ளதாக சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார். ராஞ்சியில் அவரது ஆதரவாளர்களுடன் இன்று பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து, நேற்று முன்தினம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக சம்பாய் சோரன் விலகினார்.

இந்நிலையில், இன்று ராஞ்சியில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மற்றும் அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்னிலையில் சம்பாய் சோரன் தனது ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைந்தார்.

சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஷிபு சோரனின் நெருங்கிய உதவியாளராக இருந்தவர். 1990களில் தனி மாநிலம் அமைக்கும் போராட்டத்தில் சம்பாய் சோரன் ஆற்றிய பங்களிப்பிற்காக ஜார்க்கண்ட் புலி என்ற புனைப்பெயரை பெற்றார். பின்னர் 2000ம் ஆண்டில் ஜார்க்கண்ட் பீகாரின் தெற்கு பகுதியிலிருந்து உருவாக்கப்பட்டது.

81 உறுப்பினர்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நடப்பாண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story