எனது தாயார் எப்படிப்பட்டவர் என அறிந்தபின் ஒவ்வொருவரும் ஆதரவு வழங்குவார்கள்; முர்முவின் மகள் பேட்டி


எனது தாயார் எப்படிப்பட்டவர் என அறிந்தபின் ஒவ்வொருவரும் ஆதரவு வழங்குவார்கள்; முர்முவின் மகள் பேட்டி
x

எனது தாயாரை பற்றி அறிந்தபின் ஒவ்வொருவரும் அவருக்கு ஆதரவு வழங்குவார்கள் என ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவின் மகள் பேட்டியில் கூறியுள்ளார்.



புதுடெல்லி,



ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக வருகிற ஜூலை 18ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை (24ந்தேதி) பாராளுமன்ற மாநிலங்களவை செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அப்போது அவருடன் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் உடனிருப்பார்கள். ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரின் வேட்பு மனுவை தலா 50 எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் முன்மொழியவும், வழிமொழியவும் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. திரவுபதி முர்முவின் வேட்புமனுவை பிரதமர் மோடி முதலில் முன்மொழிவார் என தெரிய வந்துள்ளது.

ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இவருக்கு மத்திய அரசு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது. ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தினை சேர்ந்த திரவுபதி முர்மு (வயது 64), ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கினார்.

இதன்பின்னர் ஒடிசா அரசியலில் நுழைந்து, மயூர்பஞ்சின் ராய்ரங்பூரின் கவுன்சிலரானார். பா.ஜ.க.வில் இணைந்து 2000 மற்றும் 2004ம் ஆண்டுகளில் 2 முறை எம்.எல்.ஏ.வானார். ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியின்போது மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற பல்வேறு துறையின் மந்திரியாகவும் பதவி வகித்த அனுபவம் கொண்டவர். 1997ம் ஆண்டு பா.ஜ.க.வின் எஸ்.டி. மோர்ச்சா மாநில துணை தலைவர் பதவிக்கு தேர்வு பெற்றவர். ஜார்க்கண்டில் 5 ஆண்டுகள் பதவி காலம் (2015 முதல் 2021 வரை) முழுவதும் நிறைவு செய்த முதல் ஆளுநர் என்ற பெருமையையும் பெற்றவர்.

ஒடிசாவின் ராய்ரங்பூரில் தனது சகோதரர் தரிணிசென் மற்றும் மகள் இதிஸ்ரீயுடன் முர்மு தற்போது ஒன்றாக வசித்து வருகிறார். இவரது மகள் இதிஸ்ரீ முர்மு, புவனேஸ்வரில் உள்ள யூகோ வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அவருக்கு இரு மகள்கள் உள்ளனர். அவர் கூறும்போது, நான் படித்த பள்ளியில் எனது தாயார் எனக்கு ஆசிரியராக இருந்தவர்.

இதனால், என் மீது கூடுதல் அழுத்தம் இருந்தது. முதலில் ஒரு மகளாக. பின்னர் ஒரு மாணவியாக என கூறியுள்ளார். சில சமயங்களில் திடீர் என அன்றைய தினம் தேர்வு நடத்தப்படும் என அவர் கூறுவார். இதனால், என்னுடன் படித்த சக மாணவிகள் என் மீது கோபம் கொள்வார்கள் என்று தனது பள்ளி பருவ காலங்களை நினைவுகூர்கிறார்.

ஜனாதிபதியாக முர்மு தேர்வு செய்யப்பட்ட பின்னரும், அவருடனேயே ஒன்றாக வசிக்க இதிஸ்ரீ விருப்பம் தெரிவித்து உள்ளார்.

அவரிடம், காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற பெண் தலைமைத்துவம் கொண்ட கட்சிகள் முர்முவை பெண் என்பதற்காக ஆதரிக்க வேண்டும் என நினைக்கின்றீர்களா? என கேட்கப்பட்ட கேள்விக்கு, ஒவ்வொரு கட்சியும், அது எதிர்க்கட்சியோ அல்லது இல்லையோ, என்னுடைய தாயாரை பற்றி அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அவர் எப்படிப்பட்ட மனிதர். அவர் எதன் மீது நம்பிக்கை கொண்டவர் என்று. அப்படி அவர்கள் செய்து விட்டால், நிச்சயம் எனது தாயாருக்கு ஆதரவு வழங்குவார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.


Next Story