அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்- புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி வேண்டுகோள்
அனைவரும் தவறாமல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என்று புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி வேண்டுகோள் விடுத்தார்.
பூஸ்டர் தடுப்பூசி
புதுவையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு சார்பில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வந்த நிலையில் புதுவை அரசானது கடந்த 1-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தி வருகிறது.
இதனிடையே நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு 75 நாட்கள் அனைவருக்கும் (18 வயதுக்கு மேல்) பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்தும் திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் கடந்த 16-ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
350 குழுக்கள்
தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பூஸ்டர் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தடுப்பூசி செலுத்துவதற்காக சுகாதாரத்துறையில் 350 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மருத்துவ குழுவினர் வீடுதோறும் சென்று விடுபட்டவர்களுக்கும் மற்றவர்களுக்கும் முதல் தவணை, 2-வது தவணை, பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர்.
சிறப்பு முகாம்
இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுவதை அனைவரும் அறியும் விதமாக புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமினை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர், ''அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் ஊசியை போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் கொரோனா விதிமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும்'' என்றும் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு, துணை இயக்குனர்கள் ராஜாம்பாள், ரகுநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.