'இந்தியாவை படேல் ஒன்றுபடுத்தினாலும், அதன் பெருமை ஆதிசங்கரருக்குத்தான்' - கேரள கவர்னர் பேட்டி
இந்தியாவை சர்தார் படேல் ஒன்றுபடுத்தினாலும், அதற்கான பெருமை, ஆதிசங்கரருக்குத்தான் சேரும் என்று கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கூறினார்.
புதுடெல்லி,
கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் அரசுக்கு பெருத்த தலைவலியாக திகழ்ந்து கொண்டிருப்பவர், அந்த மாநில கவர்னர் ஆரிப் முகமது கான். அங்கு பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிப்பது தொடங்கி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது வரை அரசுக்கும், கவர்னருக்கும் இடையே ஏழாம் பொருத்தமாக இருக்கிறது.
இந்த நிலையில், ஆரிப் முகமது கான் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசியல் ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு என்பதெல்லாம் சமீபகால நிகழ்வுகள்தான். பல லட்சம் ஆண்டுகளாக நாம் அரசியல் ரீதியாக துண்டு துண்டாக பிளவுபட்டுக்கிடந்தோம். கேரள மாநிலத்துக்கென்று மாபெரும் கலாசாரம் இருக்கிறது. இது இந்தியாவின் சிறந்த மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
இதற்கான பெருமை, கேரள சமூகத்துக்குத்தான் சேரும். கேரள மக்களுக்குத்தான் இந்த பெருமை சேரும். ஆன்மிகவாதியான நாராயண குரு போன்றவர்கள் இந்தப் பெருமைக்குரியவர்கள். கேரளாவில் கடுமையான ஒடுக்குமுறைகள் இருந்தன.
எந்த அளவுக்கு இந்த ஒடுக்குமுறை இருந்தது என்றால் பெண்கள் மேலாடைகள் அணிய அனுமதி இல்லை என்கிற அளவுக்கு இருந்தது. ஒரு நெருக்கடியான தருணம் ஏற்படுகிறபோதெல்லாம், அந்த கால கட்டத்தில் உன்னதமான ஆத்மாக்கள் வெளிப்பட்டன.
1947-ம் ஆண்டுக்குப் பின்னர் சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவை ஒன்றுபடுத்தியதால், நாம் மிகப்பெரிய ஜனநாயக நாடு ஆக முடிந்தது. நாம் ஒரே நாடாக முடிந்தது. ஆனால் இதற்கான உண்மையான பெருமை கேரள மண்ணின் மைந்தரான ஆதி சங்கரருக்குத்தான் போக வேண்டும். அவர்தான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய மக்களுக்கு அவர்களது கலாசார, ஆன்மிக ஒற்றுமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கேரள கவர்னர் ஆரிப் முகமது கானிடம் அவருக்கும், கேரள அரசுக்கும் இடையே நிலவும் மோதல் காரணமாக மாநிலத்தின் கல்வித் துறையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் பதிலளிக்கையில், "கேரளா, இந்தியாவின் அறிவு மையமாக மட்டுமின்றி, அது உலகின் அறிவு மையம் ஆகவும் மிகவும் பொருத்தமானது. ஏனென்றால், அதன் வானிலை அத்தனை இதமானது. இந்த வானிலை மிகவும் குளிராகவும் இல்லை, மிகவும் வெப்பமாகவும் இல்லை. அறிவு தேடுவோருக்கு இது மிகவும் உகந்ததாகும்" என கூறினார்.