பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தாலும் மதசார்பற்ற கொள்கையை விடமாட்டோம்- தேவேகவுடா பேட்டி


பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தாலும் மதசார்பற்ற கொள்கையை விடமாட்டோம்- தேவேகவுடா பேட்டி
x
தினத்தந்தி 28 Sept 2023 12:15 AM IST (Updated: 28 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தாலும் மதசார்பற்ற கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று தேவேகவுடா கூறியுள்ளார்.

பெங்களூரு:-

முன்னாள் பிரதமர் தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தலைவர்கள் ஏற்கவில்லை

எனது 60 ஆண்டு கால அரசியல் போராட்டத்தில் எந்த சமுதாயத்திற்கும் அநீதி ஏற்பட ஜனதா தளம் (எஸ்) விடவில்லை. கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அமைந்தது. 14 மாதங்களில் அந்த அரசு கவிழ்ந்தது. கூட்டணி ஆட்சியை கலைத்தவர்கள் யார்?. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை மும்பைக்கு அனுப்பி வைத்தவர் கள் யார்?. பா.ஜனதா ஆட்சி அமைய யார் காரணம்?. குமாரசாமியை முதல்-மந்திரி ஆக்க வேண்டும் என்று நாங்கள் யாருடைய வீட்டிற்கும் செல்லவில்லை.

ஆனால் அவரை முதல்-மந்திரி ஆக்குமாறு காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தினர். எக்காரணம் கொண்டும் காங்கிரஸ் சகவாசம் வேண்டாம் என்று நான் கூறினேன். இதை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கவில்லை. இப்போது பா.ஜனதாவுடன் ஜனதா தளம் (எஸ்) கூட்டணி வைத்தது ஏன்? என்று காங்கிரசார் கேள்வி எழுப்புகிறார்கள். எங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்களிடம் ஆலோசனை நடத்தியே முடிவு எடுத்தோம்.

உதாரணங்களை கூற முடியும்

குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்த்தது யார் என்பது குறித்து விவாதிக்க வேண்டியது அவசியம். ராகுல் காந்தி பேசும்போது, ஜனதா தளம் (எஸ்) கட்சியை பா.ஜனதாவின் 'பி-டீம்' என்று பேசினார். அவர் பேசுவதற்கு முன்பு உண்மை நிலையை ஆராய்ந்து பேசி இருக்க வேண்டும். காங்கிரசால் மதச்சார்பின்மை, ஜனநாயகத்தை காப்பாற்ற முடியுமா?. காங்கிரஸ் ஒரு குடும்பத்திற்காக அரசியல் செய்கிறது.

மாநிலங்களவை தேர்தலில் பாரூக்கை நிறுத்தினோம். அவரை காங்கிரஸ் தோற்கடித்தது. குமாரசாமியால் அரசியல் வாழ்க்கை பெற்ற செலுவராயசாமியை மந்திரி ஆக்கியுள்ளனர். எங்கள் கட்சிக்கு காங்கிரஸ் மோசம் செய்தது தொடர்பாக 100 உதாரணங்களை என்னால் கூற முடியும். எல்லா கட்சிகளும் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் தான்.

மதசார்பற்ற கொள்கை

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியை தோற்கடிக்க அங்கு பா.ஜனதாவுடன் கம்யூனிஸ்டு கட்சிகள் சேர்ந்து செயல்பட்டது அனைவருக்கும் தெரியும். நாங்கள் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தாலும், மதசார்பற்ற கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம். இதுகுறித்து உள்துறை மந்திரி அமித்ஷாவிடமே கூறியுள்ளேன்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.


Next Story