உலகின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் பாஜக வெற்றி பெறுவதை தடுக்க முடியாது: அசாம் முதல்-மந்திரி பேச்சு!
அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா திரிபுராவில் இன்று பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.
அகர்தலா,
திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா திரிபுராவில் இன்று பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
"திரிபுராவில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மீண்டும் ஆட்சியை பிடிக்கும். 60 உறுப்பினர்-சபையில் குறைந்தபட்சம் 55 இடங்களை வெல்வது உறுதி. நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சியை தக்க வைக்கும்.
2014 முதல் பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு பகுதிக்கு 60 முறை விஜயம் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை தவிர இந்தியாவில் எந்த பிரதமருக்கும் வடகிழக்கு பற்றிய தொலைநோக்கு பார்வை இல்லை. தற்போது மோடி அமைச்சரவையில் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த 5 மத்திய அமைச்சர்கள் உள்ளனர்.
திரிபுராவில் உலகின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும், இந்த முறை இங்கு பாஜக வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது".
இவ்வாறு அவர் பேசினார்.