260 ஆண்டுகள் ஆகியும்... ஸ்ரீபத்மநாபசுவாமி கோவில் கோபுரத்தில் சரியாக சூரிய ஒளி ஊடுருவும் ஆச்சரியம்


260 ஆண்டுகள் ஆகியும்... ஸ்ரீபத்மநாபசுவாமி கோவில் கோபுரத்தில் சரியாக சூரிய ஒளி ஊடுருவும் ஆச்சரியம்
x
தினத்தந்தி 25 Sept 2023 3:07 PM IST (Updated: 25 Sept 2023 4:08 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் உள்ள ஸ்ரீபத்மநாபசுவாமி கோவில் கோபுரத்தில் சூரிய ஒளி ஊடுருவும் புகைப்படம் ஒன்றை சசிதரூர் எம்.பி. பகிர்ந்து உள்ளார்.

கொச்சி,

காங்கிரசை சேர்ந்த எம்.பி. சசி தரூர் சமீபத்தில் ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலின் கோபுரத்தின் தனிச்சிறப்பை வெளிப்படுத்தும் புகைப்படம் ஒன்றை எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.

வசந்த கால தொடக்க நாளில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த நாளில், பகல் மற்றும் இரவு வேளைகள் சமகால அளவில் இருக்கும். இதுபற்றி அவர் வெளியிட்ட பதிவில், திருவனந்தபுரம் நகருக்கு ஒரு சிறந்த நாளில் (செப்டம்பர் 23-ந்தேதி) வந்தடைந்தேன்.

ஆண்டின் இரு நாட்களில் ஸ்ரீபத்மநாபசுவாமி கோவில் கோபுரத்தின் ஒவ்வொரு ஜன்னல் பகுதி வழியேயும் சூரியன் தொடர்ச்சியாக தோன்றுவது தெரியும்.

அந்த 2 நாட்களில் இந்த தினமும் ஒன்று. 260 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோபுரம் மீண்டும் கட்டப்பட்டது. அதுவும், இன்றைய தொழில் நுட்பம் எதுவும் இல்லாமல், சூரியனின் பயண திசைக்கு சரியாக ஒத்து போகும் அளவில் கட்டப்பட்டு உள்ளது.

சூரிய உதயத்தின்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. சூரியன் மறையும்போது, 4-வது ஜன்னலில் அது தோன்றும் என அவர் தெரிவித்து உள்ளார். இந்த படம் பகிரப்பட்டதும், 14 லட்சம் பேர் அதனை பார்வையிட்டு உள்ளனர். பலரும் ஆச்சரியங்களை வெளியிட்டு உள்ளனர்.


Next Story