வெளிநாடுகளில் அதிகரிக்கும் கொரோனா: பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை
நாட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என்று நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
உலக அளவில் கொரோனா பாதிப்பு இன்னும் இருக்கிறது. ஜப்பான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மீண்டும் கொரானா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு வலியுறுத்தி உள்ளது. கொரோனா பாதித்தவரின் ரத்த மாதிரிகளை மாநிலங்கள் மரபணு ஆய்வகத்திற்கு தினசரி அனுப்ப வேண்டும் எனவும் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் கடிதம் எழுதி உள்ளார். இந்தநிலையில், பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் இன்று மதியம் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. டெல்லியில் நடந்த கூட்டத்தில் உயர் அதிகாரிகள், நிபுணர்களுடன் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார். மந்திரி, அதிகாரிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் 6 முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் தொற்று பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தநிலையில், நாட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என்று நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்தார்."
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு வி.கே.பால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
விமானப் போக்குவரத்துக்கு தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும். எந்த மாற்றமும் இல்லை. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். 27-28 சதவிகிதம் மக்கள் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போட்டுள்ளனர். மூத்த குடிமக்கள் உள்பட அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும். அதற்கான வழிமுறைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.