சேலத்தில் வந்தே பாரத் ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு - டுவிட்டரில் பதிவிட்டு பிரதமர் மோடி மகிழ்ச்சி


சேலத்தில் வந்தே பாரத் ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு - டுவிட்டரில் பதிவிட்டு பிரதமர் மோடி மகிழ்ச்சி
x

சேலத்தில் வந்தே பாரத் ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

புதுடெல்லி,

சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி தொடங்கி வைத்தார். பயணம் செய்வதற்கு சொகுசாகவும், நேரமும் மிச்சப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் இந்த அதிவேக ரெயில் சேவைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்திய அளவில் தொடங்கப்பட்ட 13-வது வந்தே பாரத் ரெயில் சேவை இதுவாகும். இதேபோல, தமிழ்நாட்டிற்குள் இயக்கப்படும் முதல் சேவை ஆகும். கடந்த 8-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரெயில் சேலம் ரெயில் நிலையம் சென்றடைந்த போது ஏராளமான பொதுமக்கள் ரெயில் நிலையத்தில் திரண்டு வந்து, ரெயிலுக்கு மலர்தூவி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். வந்தே பாரத் ரெயிலுக்கு பொதுமக்கள் வரவேற்பு அளிக்கும் வீடியோவை தமிழ்நாடு பத்திரிகை தகவல் அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தது.

இந்த நிலையில், பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், அந்த வீடியோவை நேற்று பகிர்ந்து பதிவிட்டுள்ளார். அதில் 'வந்தே பாரத் ரெயிலுக்கு சேலத்தில் அற்புதமான வரவேற்பு கிடைத்துள்ளது. வந்தே பாரத் விரைவு ரெயில் செல்லும் பல்வேறு இடங்களில் இத்தகைய உற்சாகம் பொதுவாகவே காணப்படுகிறது. இது இந்திய மக்களிடையே காணப்படும் பெருமிதத்தைக் காட்டுகிறது' என்று கூறியுள்ளார்.


Next Story