கோவிலுக்குள் புகுந்து ஜனதா தளம்(எஸ்) பிரமுகருக்கு அரிவாள் வெட்டு


கோவிலுக்குள் புகுந்து ஜனதா தளம்(எஸ்) பிரமுகருக்கு அரிவாள் வெட்டு
x

மண்டியா மாவட்டம் மத்தூரில் பட்டப்பகலில் கோவிலுக்குள் புகுந்து ஜனதா தளம்(எஸ்) பிரமுகரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற நண்பன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஹலகூர்:-

ஜனதா தளம்(எஸ்) பிரமுகர்

மண்டியா மாவட்டம் மத்தூர் (தாலுகா) டவுன் பகுதியில் வசித்து வருபவர் அப்பு கவுடா. இவர் ஜனதா தளம்(எஸ்) கட்சி பிரமுகர் ஆவார். மேலும் இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் போலீசாரின் ரவுடி பட்டியலிலும் இவரது பெயர் இடம்பெற்று உள்ளது. இவர் ரியல் எஸ்டேட், கந்து வட்டி தொழில் என பல்வேறு தொழில்களை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலையில் இவர் தனது குடும்பத்துடன் மத்தூர் புறநகர் பகுதியில் உள்ள ஆஞ்சநேயசாமி கோவிலுக்கு வந்தார். அப்போது இவரை ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர்களும், அப்பு கவுடாவின் கூட்டாளிகளுமான கோனசாலே மது, மனோஜ் என்கிற மண்டேலா, அஜய் என்கிற கியாட், பாப்பண்ணா, மனு என்கிற ஹ்லி, நிஷ்வித் என்கிற மல்லி, அனில் என்கிற துப்பாக்கி ஆகிய 7 பேரும் சேர்ந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இந்த சம்பவம் அனைத்தும் கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. இதையடுத்து கோனசாலே மது உள்பட 7 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் கோவிலில் இருந்தவர்கள் அப்பு கவுடாவை மீட்டு சிகிச்சைக்காக மைசூருவில் உள்ள மணிப்பால் ஆஸ்பத்திக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

7 பேர் கைது

அதாவது அப்பு கவுடாவும், கோனசாலே மதுவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கோனசாலை மது, கூலிப்படையினரை வைத்து அப்பகவுடாவை கொலை செய்ய முயற்சித்தது தெரியவந்தது. இதற்கிடையே மலவள்ளி தாலுகா ஹலகூர் அருகே சரக்கு வாகனத்தில் கோனசாலே மது உள்ளிட்ட 7 பேரும் தப்பிச் செல்வதாக ஹலகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதையடுத்து கோனசாலே மது உள்ளிட்ட 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே அப்புகவுடாவை கொலை செய்ய முயன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


Next Story